ஞாயிறு, 15 நவம்பர், 2026

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938)

 தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938)


ஈ.வெ.ரா. அவர்களுக்கு 'பெரியார்' என்று பட்டம் கொடுத்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு!


தந்தை பெரியாரின் தலைமையில் 13.11.1938 ஆம் நாள் ஞாயிறன்று சென்னையில் ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் சுயமரியாதை இயக்கப் பெண்களால் நடத்தப்பட்ட தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாநாடாகும். இது பெண்களின் ஆற்றலையும் வலிமையையும் துணிவையும் எடுத்துக்காட்டிய மாநாடாகும். இந்த மாநாட்டின் நோக்கத்தையும் முழுச் செயல்பாட்டையும் எதிர்கால இளந் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும்.



சென்னை 13.11.1938 பிற்பகல் 1.00 மணிக்கு சென்னை பெத்துநாயக்கன்பேட்டை கிருஷ்ணாங்குளத்தை யடுத்த காசி விஸ்வநாதர் கோயில் முன்பிருந்து தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் தோழர் திருவரங்க நீலாம்பிகை அம்மையார், தோழர்கள் தாமரைக் கண்ணியம்மையார், பண்டித நாராயணியம்மையார், டாக்டர் தருமாம்பாள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர்முகத்தம்மையார். கலைமகள் அம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ.ராமசாமி, தோழர் அ.பொன்னம்பலம் உள்ளிட்ட அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்து வந்தனர்.


மாநாட்டுத் தலைவர், திறப்பாளர், வரவேற்புக் கழகத் தலைவர்களைக் கோச்சில் வைத்து அழைத்து வரப்பட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை ஏந்தி தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! தமிழ்ப் பெண்கள் வாழ்க! தமிழர் வாழ்க! என்ற கோஷங்களிட்டு வந்தனர். தமிழ்ப் பெண்கள் தமிழ் வாழ்த்துகள் பாடி வந்தனர்.


ஊர்வலத்தில் பெண்கள் மட்டிலும் 2000 பேர்கட்கு மேலிருந்தனர். ஊர்வலம் குப்பையா தெரு, தங்கசாலைத் தெரு, ஆதியப்ப (நாயக்கன்) தெரு, வால்டாக்ஸ் ரோடு ஆகியவற்றின் வழியாக வந்து சரியாக 2 மணிக்கு மாநாட்டுக் கொட்டகையாகிய ஒற்றைவாடை நாடகக் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. ஊர்வலம் வரும் முன்பே மாநாட்டுக் கொட்டகை நிரம்பி கொட்டகைக்கு வெளியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பி இருந்தனர்.


கொட்டகையில் ஒலி பெருக்கி கருவி அமைக்கப் பட்டிருந்தது. மாநாட்டில் பெண்கள் 5000 பேர்கட்கு மேல் கலந்து கொண்டனர். மாநாட்டுக் கொட்டகை வாழை மரங்களாலும், கொடிகளாலும், வரவேற்பு வளைவுகளாலும் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியில் நிற்போர்க்கும் கேட்குமாறு ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியில் இருந்து பேச்சுகளைக் கேட்டனர்.


முதலில் தலைவர், திறப்பாளர் களை வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. பின்னர் மாநாட்டு வரவேற்பு கழகத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்கி, தோழர் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் மூவரசர் தமிழ்க் கொடியை ஏற்றி வைத்தார். தோழர்கள் சி.கலைமகள், பட்டு (பட்டம்மாள் பாலசுந்தரம்), தாமரைக் கண்ணியம்மையார், பார்வதி அம்மையார் ஆகியோர் தமிழ்ப் பாட்டுகள் பாடினர். பின்னர் தோழர் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைமை ஏற்குமாறு வரவேற்புக் கழகத் தலைவர் கேட்டுக்கொண்டார். அதை ஆதரித்து தோழர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். மலர் முகத்தம்மையார். ராணியம்மாள் (தோழர் அண்ணாதுரை அவர்களின் மனைவி) ஆகியோர் பேசினர். டாக்டர் எஸ். தருமாம்பாள் மாநாட்டுத் தலைவருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுத்தார். தலைவர் தலைமையுரையாற்றினார். தோழர் பார்வதி அம்மையார் அவர்கள் தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார்.


பின்னர் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேறின.


தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்:


1. இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாததாலும் அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரை வழங்குதல் வேண்டும் என இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது. [1]

2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமுகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.

4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்வதுடன், பிறமொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாகப் பள்ளிகளின் கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாதெனத் தீர்மானிக்கிறது.

5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாகவிருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது; அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமுகத்தைக் கேவலமான வார்த்தைகளால் கூறியதையும், தோழர் மு.இராகவையங்கார், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னளவுக்கு மீறிக் கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், ஹைக்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.[2]


                                                            ‘குடிஅரசு’ (நவம்பர். 20, 1938)


தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' பட்டம் வழங்கல்
                       திருவல்லிக்கேணியில் தமிழர் பெரும் படை (13.11.1938)
தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு குறித்து முன் அறிவிப்பு


அடிக்குறிப்புகள் :

1.சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் 17.09.2004, பக்கம்-178,179 [விடுதலை]


2.  ‘குடிஅரசு’ (நவம்பர். 20, 1938)






தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938)

  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938) ஈ.வெ.ரா. அவர்களுக்கு 'பெரியார்' என்று பட்டம் கொடுத்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு! தந்தை...