செவ்வாய், 27 ஜனவரி, 2026

சுந்தர்ராவ் நாயுடு

ஆதி திராவிடர்களின் உரிமைக் காவலர் சுந்தர்ராவ் 


- எக்ஸ்ரே. ந.அ. கருணாகரன் (கட்டுரையாளர்)


1916 நவம்பர் 20ல் தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக் கட்சியை சர். பிட்டி. தியாகராயர் தோற்றுவித்தார். அக்கட்சியின் வருடாந்திர புத்தகத்தை ஆங்கிலத்தில் அச்சடித்து வெளியிட்டு வந்தவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி திவான் பகதூர் T வரதராஜூலு நாயுடு BABL ஆவார். இவர் பிச்சைக்கார விடுதியையும், பார்வையற்றோர் பள்ளியையும் தோற்றுவித்தார்.

1920 முதல் 1923 வரை சென்னை நகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கௌரவ தலைவராக (President) சர். பிட்டி, தியாகராயர் விளங்கியபோது சென்னை நகராட்சியின் கல்விக்குழுவின் தலைவராக (Chairman) T.வரதராஜூலு நாயுடு விளங்கினார். சென்னை நகராட்சிப் பள்ளிகளில் முதன் முதலில் இவர்தான் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். 1920 ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு பள்ளியிலும் 1921-22ல் மேலும் அய்ந்து பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கப்பட்டன. இவர் கட்டாய ஆரம்பக் கல்வி (compulsory elementary education) திட்டத்தை முதல் முதலில் 1925-26ல் கொண்டு வந்து சென்னை நகரில் நான்கு பகுதிகளில் செயல்படுத்தினார்.

மாநகராட்சி பள்ளிகளிலுள்ள மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் திரு வரதராஜூலு நாயுடுவின் மகனான T சுந்தர்ராவ் மாநகராட்சிப் பள்ளிகளில் 1926ல் சாரணர் படையை முதன் முதலில் அறிமுகப் படுத்தினார். இவர் சென்னை மாநகராட்சி மாணவர் சாரணர் சங்கத்தின் மாவட்ட துணை ஆணையராக விளங்கினார். 

மாதிரி இல்லங்கள், சத் துணவுத் திட்டம் குழந் தைகள் காப்பகம் ஆகி யவற்றை முதன் முத லில் அறிமுகப்படுத்தியதே நீதிக் கட்சிதான்..

கேப்டன் உடையில் சுந்தர்ராவ்

1926-27ல் சென்னை நகரில் மூன்று பகுதிகளில் கட்டாய ஆரம்பக்கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழை எளிய குடும்ப பிள்ளைகளுக்கு இலவச கல்வி, புத்தகங்கள். சீருடைகள், மதிய உணவு ஆகிய அனைத்தும் வழங்கப்பட்டு, கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தை வலியுறுத்தியும் பெரும்பாலான குடும்பங்களில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்பாததற்கு காரணம் என்னவென்று அறிய திரு . சுந்தர்ராவ் அம்மக்கள் வாழுகின்ற பகுதிகளுக்கு தேரில் சென்று அவர்களது நிலையைக் கண்டு மனவேதனையடைந்தார். தொழிலாள குடும்பங்களில் பெரும்பாலோர் கணவன் மனைவி ஆகிய இருவரும் பணிக்குச் சென்று விட்டால் அவர்களது இல்லங்களில் சிறுவர் சிறுமிகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாமற் போவதால் அவர்களை கவனித்துக் கொள்ள பள்ளிக்குச் செல்லக் கூடிய வயதுள்ள பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளுகின்றனர். எனவே திரு T.சுந்தர்ராவ் முதன் முதலில் 1927ல் சென்னை கொய்யா தோப்பில் குழந்தைகள் வரவேற்பு இல்லம் (BABY WELCOME HOME) ஒன்றை துவக்கி அவர்களது அவல நிலையைப் போக்கினார். இத்திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் அவர் 1946-47ல் சென்னை மாநகரின் மேயராக விளங்கியபோது பிராட்வே பகுதியில் பி.ஆர்.என் தோட்டத்தில் மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் காப்பகம் ஒன்றைத் துவக்கினார். அக்காப்பகத்தை அன்றைய ஆளுநர் சர்ச் பால் எட்வர்ட் நை அவர்களின் துணைவியாரைக் கொண்டு திறந்து வைத்தார். அக்காப்பகத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு 

ஆதி திராவிடருக்குத் தனித்தொகுதி வழங்கச் கூடாது என்று காந்தி யார் பட்டினி மிரட்டல் செய்தபோது, அதை எதிர்த்து ஆதி திராவிட மக்களைத் திரட்டியவர் சுந்தர்ராவ்

விளையாடுவதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பிள்ளைகளை கவனித்துக் கொள்ள ஆயாக்களையும் உடல் நலத்தைப் பேணிக் காப்பதற்காக ஒரு பெண் மருத்துவரும் நியமிக்கப்பட்டார்கள். அப்பிள்ளைகள் வாரத்திற்கு மும்முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார்கள். இதன் கரணமாக அகில இந்திய மாணவர் நல்வாழ்வு சங்கம் மேயர் T சுந்தர்ராவ் அவர்களை சத்துணவின் வித்தகத் தந்தை என பாராட்டி அண்ணாரின் நூற்றாண்டு விழாவை 1988 டிசம்பர் 17ல் பெரியார் திடலில் கொண்டாடியது. விழாவிற்கு ஆதி திராவிட தலைவர்களான திரு. க. அயோத்திதாச பண்டிதர். திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் பேரன் திரு.பி. ஜெயகரன் அவர்கள் தலைமை வகித்தார். ஆதி திராவிட சமுதாய வீராங்களை மீனாம்பாள் சிவராஜ் அவர்களது புதல்வர் திரு. எஸ். தயாசங்கர்


1927ல் சென்னை கொய்யாத் தோப்பில் அமுல் நடத்தப்பட்ட சத்துணவுத் திட்டம்



1947ல் நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகம்

முன்னிலையில் நீதிபதி P வேணுகோபால் அவர்கள் மேயர். T. சுந்தர்ராவ் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். செட்யூல்டு சமுதாயத் தளபதி மு. சுந்தரராஜன், எஸ்.வி. பாலசுந்தரம், தமிழம் ஆசிரியர் பன்னீர்செல்வம், ந.அ. கருணாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். திரு. T. சுந்தர்ராவ் 1889 ஜனவரி 18ல் சென்னை புதுப்பேட்டையில் திருமதி அரங்கநாயகி அம்மாளுக்குப் பிறந்தார். அவரது பள்ளிப் படிப்பை சென்னை கிருஸ்துவ பள்ளியில் முடித்ததும், கிருஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஹாக்கி, போலோ, கால்பந்து, ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கங்களையும், கேடயங்களையும். கோப்பைகளையும் பரிசாகப் பெற்றார். குதிரை சவாரியிலும் நீச்சலிலும் சிறந்த வீரராக விளங்கினார். 1915ல் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1918ல் வழக்கறிஞர் பட்டம் பெற்று

நீதிக் கட்சி தலைவர் களில் ஒருவரான சுந்தர்ராவ் ஆதி திராவிட  மக்களின் உரிமைக் காவலராக விளங்கினார். 1927 ஆம் ஆண் டிலேயே குழந்தைகள் காப்பகம் துவங்கிய பெருமை அவரையே சாரும்.

 1919ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். 1928ல் சென்னையில் அற மன்ற நீதிபதியாக விளங்கினார். சென்னை பல்கலை கழகத்தின்பொது நிர்வாக சபையிலும், மாவட்டக் கல்விக் குழுவிலும் அங்கம் வகித்தார். பத்மவெலம் கல்வி அறக்கட்டளையின் செயலாளராகவும் விளங்கினார். T. சுந்தர்ராவ் கோப்பம்மாள் என்பவரை மணந்து மூன்று மகன்களுக்கும் நான்கு மகள்களுக்கும் தந்தையானார். பெரும் செல்வத்துடன் பட்டம் பதவிகளை இவர் பெற்றிருந்தும், தன் இளைய மகன்களான T வேணுகோபால் ராவ். T. நாராயண ராவ் ஆகியோரைக் கொய்யாத் தோப்பில் குடிசை வாழ் மக்கள் வாழும் பகுதியில் நாகப்ப முதலி தெருவிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் படிக்கச் செய்தார். செல்வத்தை செலவழிக்கக் கூடாது என்றோ அல்லது கஞ்சத்தனத்தாலோ அவர் அப்படிச் செய்யவில்லை.

மாநகராட்சிப் பள்ளியானாலும் தாழ்வாக ஒருவரும் கருதக் கூடாது. பிள்ளைகளுள் உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு தோன்றக் கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். சென்னையில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான பக்கிங்காங்-கர்னாடிக் துணி ஆலையில் 1921ல் திரு.வி. கலியாண சுந்தரனார். வாடியா, சக்கரை செட்டியார். செல்வதி செட்டியார். ராமானுஜூலு நாயுடு போன்ற காந்தியவாதிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். அந்த ஆலையை ஒழித்துக் கட்டி விட்டால் அத் தொழிலாளர்கள் வேலையை இழப்பார்கள். அப்படி இழந்த தொழிலாளர்களுக்கு கை ராட்டினம் வழங்க வேண்டுமென்பதற்காகவே. காந்தியார் ரூபாய் முப்பதாயிரத்தை தொழிற் சங்கத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆதி திராவிட மகாஜன சபையும், நீதிக் கட்சியும் தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு பணித்தனர். இதன் காரணமாக வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக ஆதி திராவிட மக்கள் பணிக்குச் சென்றார்கள். அம்மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சென்றார்கள் என்ற காரணத்தினால் சென்னை மாநகரில் ஆதி திராவிடர் குடியிருப்புகள் தாக்கப்பட்டன. புளியந்தோப்பு என்ற குடியிருப்பு அடியோடு எரித்து சாம்பலாக்கப்பட்டது. 1922 ஜனவரியில் இளவரசர் ஏழாம் எட்வர்ட் சென்னைக்கு வருகை தந்தபோது இது போன்ற தாக்குதல் நடந்தது. கலவரங்களை ஒடுக்க சென்னை மாநகராட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயரும் சென்னை மாநில முதல் மந்திரி பனகல் அரசரும் இளவரசர் வேல்ஸ் படை (Prince of Wales Corps) ஒன்றைத் தோற்றுவித்து அப்படையின் தளபதியாக (captain) Tசுந்தர்ராவ் அவர்களை நியமித்தனர். இவரும் மிகத்திறமையாக கலவரங்களை அடக்கி ஒடுக்கி அமைதியை நிலை பெறச் செய்தார். 

கலவரங்களின் போது ஆதிதிராவிடர் குடியிருப்புகள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சர். பிட்டி. தியாகராயர் மாதிரி இல்லங்கள் (Model Houses) என்ற ஒரு திட்டத்தை மாநகராட்சியின் திட்டமாகக் கொண்டு வந்தார். இத்திட்டதின்படி சென்னை ஜார்ஜ் டவுனில் ஆசீர்வாத புரத்திலும், வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோட்டிலும், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு போன்ற பகுதிகளிலும் வரிசை வரிசையாக சேரிவாழ் மக்களுக்கு கல் இல்லங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவர் காலத்திற்குப் பிறகு T சுந்தர்ராய் இத்திட்டத்தின்படி எழும்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் மாதிரி இல்லங்களை 1926ல் கட்டிக் கொடுத்து 1927ல் அம்மக்களை குடியேறச் செய்தார். மேலும் கோமளேஸ்வரன் பேட்டையில் அம்மக்கள் வாழும் பகுதியில் அவர்கள் குளிப்பதற்காகப் பொதுக் குளிப்பறை ஒன்றையும், அப்பகுதியில் பூங்கா ஒன்றையும் உருவாக்கினார். வாங்கஸ். தோட்ட சாலையில் மழையில் ஒதுங்கவும், வெயிலில் இளைப்பாறவும் புகலிடம் (SHELTER HOUSE) ஒன்றை கட்டுவித்தார்.

குடிசை வாழ் மக்கள் வீடுகள் கட்டிக் கொள்ளவும் வண்டிகள், மாடுகள் வாங்கிக் கொள்ளவும் சிறு தொழில்கள் செய்து மேன்மையடையவும் கூட்டுறவு நாணய சங்கங்கள் ஆங்காங்கே குடிசைப் பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்டன. 

T. சுந்தர்ராவ் 1921-25 வரை அய்ந்து ஆண்டுகள் கௌரவ கூட்டுறவு நாணய சங்கத்தின் உதவி பதிப்பாளராக விளங்கியதால், 1922ல் பெரம்பூர் பேரக்ஸ் நியூபேரன்ஸ் சாலையில் இளவரசர் வேல்ஸ் சென்னை கூட்டுறவு ஒன்றையும், பிராட்வேயில் பி.ஆர்.எண் தோட்டப் பகுதியில் வில்லிங்டன் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றையும் தோற்றுவித்தார்.

T.சுந்தர்ராவ் அவர்கள் சென்னை சமூக சேவகர் சங்கத்தின் செயலாளராக விளங்கினார். வெள்ளத்தால் குடிசை வாழ் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகும்போது, தன் இல்லத்தையும், உணவு, உடைகளையும் அம்மக்களுக்கு வழங்கியதோடு, அரசாங்கத்திடமிருத்தும் அவற்றைப் பெற்றுத் தந்தார். அவர் 1930ல் புதுப்பேட்டை ஊழியர் சங்கம்  (Pudupet Service League) என்ற ஓர் அமைப்பை தோற்றுவித்து அதன் ஆயுள் கால காப்பாளராக விளங்கினார். இச்சங்கம் இரவு பாடசாலையையும், நூலகத்தையும் நடத்தி வந்ததுடன் கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் இளைஞர்களுக்குத் தக்க பயிற்சியளித்து அவ்வப்போது சென்னை மாநகரிலுள்ள பல்வேறு குழுவினர்களைக் கொண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளையும் வழங்கி வந்தது. 

T. சுந்தர்ராவ் க்ஷத்தரியர், உயர்ந்த வகுப்பினர். 'முத்திரைதானம்' பெற்றவர். முத்திரைதானம் பெற்றவர்கள் மிகவும் 'அய்தீகம்' உடையவர்கள். தம் உறவினர்களைக் கூட தீண்ட மாட்டார்கள். அவர்கள் கையால் கூட உண்ணவும் மாட்டார்கள், மதக் கட்டுப்பாடுகள் அப்படியிருக்க, T. சுந்தர்ராவ் ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்குச் செல்லார். அங்கு 'ராம பஜனை' செய்வார். அம்மக்கள் அன்போடு அளிக்கும் கூழை விரும்பிக் குடிப்பார். அவர்கள் அதை தாம் பயன்படுத்தும் கலயமாகிய மொந்தையில் கொடுத்தாலும் அப்படியே வாங்கிப் பருகுவார். காந்தியைப் போல உயர் குடியினர் பஜனை செய்யும் கோயிலாகிய பிர்லா மாளிகை போன்ற இடங்களில் அவர் தம் ராம பஜனையை செய்திருப்பாரேயானால் அவரை 'மகாத்மா' என்று அழைத்திருப்பார்கள். அவர் அவ்வாறு செய்யாத காரணத்தினால் அவரை காந்தியவாதிகள் "பறநாயுடு" என்று அழைத்து வந்தனர். அவர் அதை தனக்கு கிடைத்த பெரும்பேராகவே எண்ணி புன்னகையோடு பெருமைப்பட்டுக் கொள்ளுவார். அதற்காக அவர் தம் மக்கள் தொண்டினை மாற்றிக் கொள்ளவில்லை.

 சுந்தர்ராவ் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் செட்யூல்டு சமுதாய மக்கள் தாங்கள் வாழுகின்ற பகுதியான 'நாயடிச்சான் பரச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்ததை சுந்தரபுரம் என்று பெயர் மாற்றி வைத்துக் கொண்டார்கள். அதே போல அவரது தந்தையின் பெயரில் நரியங்காடு என்ற பகுதிக்கு வரதராஜபுரம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். சர். பிட்டி, தியாகராயரது சேவையும் மதித்து அம்மக்கள் திருவொற்றியூரில் தியாகராயபுரம் என்று அவர்கள் வசிக்கும் ஒரு பகுதிக்கு பெயர் வைத்துக் கொண்டார்கள்.

T. சுந்தர்ராவும் தனித்தொகுதி முறையும்

1932 ஆகஸ்டு 17ல் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டானல்டு செட்யூல்டு வகுப்பாரின் தனித்தொகுதிக்குச் சாதகமாக அரசு முடிவு செய்ததாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதை எதிர்த்து காந்தியார் 1932 செப்டம்பர் 20 முதல் தன் இறுதி காலம் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக 1932 செப்டம்பர் 13ல் அறிவித்தார். இதன் காரணமாக  T.சுந்தர்ராவ் 1932 செடம்பர் 18 ஞாயிரன்று சென்னை பெரம்பூர் களவன கண்ணஞ்செட்டியார் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள திறந்த வெளியில் செட்யூல்டு வகுப்பாரின் கூட்டம் ஒன்றை கூட்டினார். மாதவரம், பெரம்பூர். வியாசர்பாடி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி. ரெட்ஹில்ஸ் கொளத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம், சேத்துப்பட்டு, எழும்பூர். புதுப்பேட்டை, ஆயிரம்விளக்கு, மக்கீஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் வாழும் ஆதி திராவிடர், ஆதி ஆத்திரர் ஆகியோர் பெருந்திரளாக வந்து அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தின்போது சுந்தர்ராய் அவர்களுக்கு பெரிதும் உதவியவர் ஜெ. சிவசண்முகபிள்ளை ஆவார். அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சுந்தர்ராவ் "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி அரசு வழங்கியதை காந்தியார் விரும்பலில்லை. அதற்காக அவரது உயிரையும் விடப் போகிறேன் என்கிறார். அவர் இறந்தால் அதற்கு வீண் பழியை உங்கள் மீது சுமத்தப் பார்க்கிறார். அதற்காக நீங்கள் கவலைப் படாதீர்கள். உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தனித் தொகுதி முறை மட்டுமே பலன் அளிக்கும். எக்காரணத்தைக் கொண்டும் அரசு அளித்த தனித் தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டாம்" என்று தெளிவாக எடுத்துரைத்தார். அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்ட திரு. ஜெ. சிவசண்முக பிள்ளை ஒருவர் மட்டுமே தனித்தொகுதி முறைக்கு பதிலாக பிரைமரி தேர்தல் முறையை ஆதரிக்கும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. 

பூனா ஒப்பந்தத்தின் மூலம் தனித்தொகுதி முறை கைவிடப்பட்ட போதிலும் எப்படியாவது செட்யூல்டு வகுப்பாரின் உரிமைகளை காப்பதற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று எண்ணிய, சுந்தர்ராவ் 1933ல் தாழ்த்தப்பட்டோர் ஊழியர் படை(THE DEPRESSED CLASSES SERVICE ARMY) என்ற ஒர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக பொறுப்பேற்றார். செட்யூல்டு வகுப்பாருக்கு தனித்தொகுதி முறையை (SEPERATE ELECTRATE) கிடைக்க செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகத் திகழ்ந்தது. இவ்வமைப்பின் செயலாளர்களாக திரு. J சிவசண்முகபிள்ளை, திரு. பாலகுருசிவம் ஆகியோரை நியமித்தார். இவ்வமைப்பின் துணைத் தலைவர்களாக ரெவரண்ட் ஜான் ரத்தினம், சுவாமி ஜெகஜாநந்தா போன்ற ஆதிதிராவிட தலைவர்கள் விளங்கினார்கள். முதல் மந்திரி பொப்லி அரசரும் செட்டி நாட்டு குமார ராஜா முத்தையா செட்டியாரும் அதன் காப்பாளர்களாக பொறுப்பேற்றனர். சென்னை நகரிலும் சுற்று வட்டாரத்திலும் மொத்தம் 7000 உறுப்பினர்கள் இதில் அங்கம் பெற்றனர். இது சம்பந்தமாக 1934ல் சென்னையில் வரதராஜபுரத்தில் நீதிபதி கிருஷ்ணசாமி நாயுடுவின் பங்களாவில் பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார் அவர்களை வரவழைத்து அவரது மேலான யோசனையைக் கேட்டறிந்தார். 

வரலாறை திரிக்கும் மாபொசி

நீதிக்கட்சி தலைவர் களை கடுமையாக சாடு வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் ம.பொ.சி. உண்மைக்கு மாறான செய்திகளை எழுதி வர லாற்றையே கொண்டிருக்கிறார். உதாரணமாக 1949-ம் ஆண்டு மரணமடைந்த டி. சுந்தர் ராவ் (நாயுடுவை) 1935ம் ஆண்டிலே மரணமடைந்து விட்டதாக தனது 'தமிழகத்தில் பிறமொழியினர்" என்ற நூலில் எழுதியிருக்கிறார்!

- உண்மை இதழ், 16-31.12.1989

தாமரப்பாக்கம் சுந்தர ராவ் நாயுடு (T. Sundara Rao Naidu)(1891-1949)

சுந்தரா ராவ் நாயுடு 1889 ஜனவரியில் திவான் பகதூர் டி.வரதராஜுலு நாயுடு (1863-1930) பத்ம வேலம்மா நாயுடு குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் உள்ள சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட பட்டம் பெற்றார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.

சுந்தர ராவ் நாயுடு 1949இல் எதிர்பாராத விதமாக இறந்தார். சென்னையின் ஆயிரம் விளக்குகளில் உள்ள டி.சுந்தர ராவ் நாயுடு தெரு என்பது இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. சுந்தர் ராவ் பூங்கா என்பது சென்னை மாநகராட்சி பூங்கா ஆகும். இது எழும்பூர் மார்ஷல்ஸ் சாலையில் உள்ளது. இவரது சிலை எழும்பூரில் லாங்ஸ் கார்டன் சாலை மற்றும் பாந்தியன் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக திருத்தப்பட்ட நாள்; 27.01.2026


சுந்தர்ராவ் நாயுடு

ஆதி திராவிடர்களின் உரிமைக் காவலர் சுந்தர்ராவ்  - எக்ஸ்ரே. ந.அ. கருணாகரன் (கட்டுரையாளர்) 1916 நவம்பர் 20ல் தென் இந்தி...