திங்கள், 19 அக்டோபர், 2026

ஆற்காடு இரட்டையர்

 

அகிலம் வியக்கும் ஆற்றல்மிகு ஆற்காடு இரட்டையர்

1887ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள் இராமசாமி (முதலியார்), இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோர் அடுத்தடுத்துப் பிறந்த இரட்டையர்கள்.

தந்தையார் குப்புசாமி (முதலியார்), தாயார் சீத்தம்மாள். குழந்தைகளுக்கு 2 வயது ஆகும்போது தாயர் இயற்கையெய்தினார். பிறகு தந்தையாரின் அரவணைப்பில் மழலைகள் வளர்ந்தனர். ஆனால், தந்தை தமது 52ஆவது வயதில் மறைந்தார். ஆகவே, இரட்டையர்கள் அவர்களது தமையனார் துரைசாமி (முதலியார்) பாதுகாப்பில் வளர்ந்தனர். இருவரும் சென்னை கிருத்துவக் கல்லூரியில் (அப்போது பாரி முனையில் இருந்தது.) சேர்ந்து அங்குள்ள “கைந்நஸ்’’ விடுதியில் படித்தனர்.

கல்வி கற்க தொடங்கிய நாள் முதல் இருவரும் ஒன்றாகவே படித்து வந்தனர். பிறகு மேற்படிப்பிற்காக வேறு வேறு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியவர்களாகினர். மூத்தவர் இராமசாமி சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞராக சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்துகொண்டார்.

இளையவர் இலட்சுமணசாமி சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எல்.எம்.அண்டு எஸ். பட்டம் பெற்று அரசு மருத்துவமனையில் தமது பணியைத் தொடங்கினார். இரட்டையர்கள் வேலூரை அடுத்த ஆற்காடு நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆற்காடு சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர்.


ஆ.இராமசாமி (முதலியார்)

வக்கீல் தொழிலில் திறமையாக பணிபுரிந்து நல்ல வருமானம் ஈட்டிய நிலையில் சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படாததைக் கண்டு அரசியலில் ஈடுபட்டார். “ஜஸ்டிஸ்’’ கட்சியில் சேர்ந்து மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். பிறகு, அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு அரிய சேவைகள் புரிந்தார். அவர் புகழ் உள்நாட்டில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் பரவியது. 1945இல் அய்க்கிய நாடுகள் சபை அமைந்தபோது, இந்தியாவின் சார்பில் கையெழுத்திட்டவர் திரு.இராமசாமி. அய்தராபாத் பிரச்சினையைக் கையாள அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்விட்ஜர்லாந்து சென்று அங்கு அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் சார்பில் வாதாடி அய்தராபாத் நகரத்தை இந்தியாவுடன் இணைத்த பெருமை அவருடையதே.

சென்னை மாநகரத்தின் தலைவராய் பொறுப்பேற்றவுடன், மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார்.

பிறகு மத்திய அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு சிறந்த பணி ஆற்றினார். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தின. மேலும், இந்திய அரசு சார்பில் பத்மவிபூஷன் பட்டம் அளிக்கப்பட்டது.

இரயில் நிலையத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார்க்கு தனித்தனியே சிற்றுண்டிச் சாலை வைத்துள்ளதை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் போராட்டத்தில் இறங்கியபோது மத்திய அரசின் வர்த்தக அமைச்சராய் இருந்த சர்.ஏ.இராமசாமி அவர்கள் இந்த வேறுபாட்டை அகற்ற (20.03.1941) உத்தரவிட்டார்.


வாழ்க்கைக் குறிப்பு

 சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1920இல் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920–1926; 1931–1934 காலகட்டங்களில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி முதலியார் 1934இல் இடம்பெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், எஸ். சத்தியமூர்த்தியிடம் தோற்றுப் போனார்.

1910-ல், காமாட்சி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஆர்.தாமோதரன் என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். மாபெரும் சாதனைகளைப் படைத்த ராமசாமி 17. சூலை 1976 அன்று தனது 88-வது வயதில் காலமானார்.

நீதிக்கட்சி

இராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். சூலை 1918இல் இராமசாமி முதலியார், மருத்துவர் டி. எம். நாயர், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது.இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார. இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கம் மிக்கவையாக அமைந்திருந்தன.

நவம்பர் 8, 1926இல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி 98இற்கு 21 இடங்களை மட்டுமே பிடித்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.தோல்வியடைந்தவர்களில் முதலியாரும் ஒருவர். தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பி. என். ராமன் பிள்ளைக்குப் பதில் நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார். இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித் தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர் ஏ. டி. பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர். இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935இல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். இவர் பிரித்தானிய அரசின் இந்தியத்துறை அமைச்சரின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பெப்ரவரி 25, 1937இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.

அனைத்திந்தியப் பார்ப்பனரல்லாதோர் இயக்கம்

இராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜுடனும் மகாராட்டிரப் பார்ப்பனரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் மற்ற வட இந்தியப் பார்ப்பனரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.திசம்பர் 18, 1922இல் சதாராவில் இரண்டாம் இராஜாராமின் தலைமையில் நடந்த பார்ப்பனரல்லாதோர் மாநாட்டில் இவரும் பங்கேற்றார். திசம்பர் 26, 1924இல் பெல்காமில் நடந்த அனைத்திந்தியப் பார்ப்பனரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. பெப்ரவரி 8, 1925இல் நடந்த ஏழாவது பார்ப்பனரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனரல்லாதோர்களிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

1925இல் சர் பி. டி. தியாகராய (செட்டி)யாரின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும் நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் இராமசாமி முதலியார் ஒருவர் மட்டுமே. திசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாடு நடத்த பனகல் அரசருக்குத் துணை புரிந்தார். திசம்பர் 26, 1925இல் இரண்டாவதாக மறுபடியும் ஒரு மாநாட்டை அமராவதியில் நடத்தினார். அது இரு தொடர்களாக நடந்தது. முதல் கூட்டத்தொடருக்குக் கோலாப்பூர் மகாராசாவும் இரண்டாவது தொடருக்குப் பனகல் அரசரும் தலைமை தாங்கினர்.

இரண்டாவது தொடரில் இராமசாமி  முதலியார் பேசியது:-

முதலியாரின் பேச்சைத் தி இந்து நாளிதழ், பிற மாகாணத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பம் இந்த அளவுக்கு அவரது கற்பனையைத் தூண்டியிருக்கிறது என விமர்சனம் செய்தது.

போர்க்கால அமைச்சரவையில்

1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இராமசாமி முதலியார், ஆளுநரின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜூன் 1942ல் அவருக்கு கே. சி. எசு. ஐ (KCSI) பட்டம் வழங்கப்பட்டது. சூலை 1942இல் பிரித்தானியப் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட இரு இந்தியரில் இவரும் ஒருவர். பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட மற்றப் பகுதிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் சமமாக வழங்கப்பட்டிருந்த்து.

டாக்டர்

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு "டாக்டர் ஆப் சிவில் லா" (Doctor or Civil Law) என்னும் பட்டத்தை 1945 ஆம் ஆண்டில் வழங்கியது.

அய்க்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றத் (ECOSOC) தலைவராக

1945இல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக இராமசாமி முதலியார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த செயற்குழுக் கூட்டதிற்குத் தலைமை தாங்கினார்.சனவரி 23, 1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராமசாமி முதலியாரின் தலைமையில் பெப்ரவரி 1946இல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டுச் சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சூன் 19, 1946இல் பன்னாட்டுச் சுகாதார மாநாடு நடந்தது. அதனை இராமசாமி முதலியார் தொடங்கி வைத்தார். அம்மாநாட்டிற்றான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பொருளாதார, சமூக மன்றத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்து பின் பணிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவுக்குத் திரும்பி மைசூரின் முதலமைச்சராகப் (திவான்) பதவியேற்றார். மைசூர் மகாராஜா ஜயச்சாமராஜ வாடியாருக்கு சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டுமென ஆலோசனை கூறினார்.

திரு ஆ.இராமசாமியைப் பற்றி பெரியார் கூறியதாவது:

“இந்த நாட்டிலேயே அவர் ஒரு பெரிய மேதாவி. அதை யாரும் மறுக்க முடியாது. அவர் நம் நாட்டிலேயே உயர்ந்த அறிவும், திறமையும் உள்ள கெட்டிக்காரர். ஜாதிவெறி, ஜாதி ஆணவம், ‘தங்கள் ஜாதியைத் தவிர மற்ற ஜாதியாரை ஒழித்துக் கட்டுவதுதான் தம் ஜாதியின் தர்மம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிற அக்கிரமம் இல்லாது இருக்குமானால் சர்.ஏ.இராமசாமி முதலியார் இன்றைய தினம் இந்திய நாட்டிற்கு ஜனாதிபதியாக இருக்க வேண்டியவர்.’’

வர்ணாசிரமம் ஒழியவும், பெண்கள் உரிமை பெறவும், அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் செல்லவும் அயராது பாடுபட்டவர்.


திரு.ஆ.இலட்சுமணசாமி (முதலியார்)


இளையவர் இலட்சுமணசாமி மருத்துவராகி சென்னை எழும்பூர் தாய்_சேய் மருத்துவமனையில் சேர்ந்து சிறந்த பணியாற்றி வந்தார்.

அன்றைய ஆங்கில ஆட்சியில் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பதவி ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆனால், ஆங்கிலேயர்-களைக் காட்டிலும் பல மடங்கு திறமைசாலி-யான இலட்சுமணசாமி முதலியார் அப்பதவிக்கு ஆங்கில அரசாலேயே நியமிக்கப்பட்டார். மருத்துவக் கல்லூரியின் முதல்வராக சிறந்த பணியாற்றினார்.

ஆகவே, அவர் சேவை கல்வியின் மற்ற துறைகளிலும் தொடர, 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 19ஆம் நாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகத் தேர்ந்-தெடுக்கப்பட்டார். அதிலிருந்து 1969ஆம் ஆண்டு வரை 27 ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக சிறந்த பணியாற்றினார்.

1946ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவைக்கு கல்வியாளர்கள் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு சட்ட மேலவை தலைவராகி, அரசுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்.

1952ஆம் ஆண்டு ஒரு அநியாயம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. அதுவே அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும் என்று கூறி இராசகோபாலாச்சாரியார் 6000 பள்ளிகளை இழுத்து மூடிவிட்டார். பல இலட்சக்கணக்கான மாணவர்களின் படிப்பு பாழானது. இதை பெரியார், “குலக்கல்வித் திட்டம்’’ என்று சாடி பெரும் போராட்டத்தில் இறங்கினார். நாடு முழுவதும் கொந்தளித்தது.

அப்போது மேலவையின் தலைவராக இருந்த இலட்சுமணசாமி, “இந்த கல்வித் திட்டத்தால் பெரும்பாலான சிறார்கள் படிப்பை இழந்துவிடுவர். பெண்களும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பலர் அப்பன் தொழிலை செய்யாது கல்வி கற்கின்றனர். அவர்கள் எதிர்காலம் கல்வியில்லாமல் கேள்விக்குறியாகிவிடும்’’ என்ற தமது எதிர்ப்பைப் பதித்தார்.
ஆச்சாரியாருக்கு எதிர்ப்பு வலுக்கவே தமக்கு உடல்நலம் சரியில்லை என்று சாக்குபோக்குக் கூறி பதவியை விட்டு ஓடிவிட்டார். ஆனால், துரத்தப்பட்டார் என்பதே உண்மை!

இலட்சுமணசாமி இந்தியாவில் பல உயர்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அய்க்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

பல நாட்டு பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன. இந்திய அரசும் அவருக்கு 1963இல் பத்மவிபூஷன் பட்டம் வழங்கி பெருமைப்-படுத்தியது.
இலட்சுமணசாமி சிறந்த கட்டிடக் கலை நிபுணரும் ஆவார். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், அங்குள்ள பட்டமளிப்பு மண்டபம் (இப்போது தொலைதூரக் கல்வி இயக்கமும், பல பெரிய அரசு விழாக்களும் அங்கு நடத்தப்படுகிறது.) ஆகியவைகள் இலட்சுமணசாமியால் கட்டப்-பெற்றன.
சென்னை தரமணியில் இயங்கிவரும் அய்.அய்.டி. நிறுவனமும் இலட்சுமணசாமி முயற்சியால் கொண்டுவரப்பட்டு இன்றும் உலகளாவிய புகழ்பெற்று வருகிறது. அந்நிறு வனத்தில் இலட்சுணசாமி முதலியாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இன்று பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கிச் சீரழிகிறது.

அகில இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு இந்தியில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, ஆங்கிலத்தில் தென்னிந்திய மக்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் இவர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.


குறிப்பு ஆதாரம் :

1.உண்மை இதழ், 1-15.10.2016

2.விக்கிப்பீடியா


கடைசியாக திருத்தப்பட்ட நாள் : 20.10.2026

தளபதி சி.டி நாயகம்

 

                      சுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி நாயகம்

தந்தை பெரியார் அவர்களது அடிநாள் தோழராக, தொண்டராக, நன்னம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த பெருந்தகையாளர் தெய்வநாயகம் அவர்கள் நெல்லை மாவட்டக் குலசேகரன் பட்டினத்தில் 7.10.1878இல் பிறந்து அவ்வூரி-லேயே கல்வி கற்றவர்.

சென்னைக்கு வந்து பிட்.டி.தியாகராயர் தாளாளராயிருந்து நடத்திவந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப் பற்றுமேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சிப் படைக்கப் பாடுபடும் சுயமரி-யாதை இயக்க ஈடுபாடும் கொண்டார்.

தம் சொந்த முயற்சியில் சென்னையில் பொருளியற்றி கல்வி பெற்று, கூட்டுறவுத்துறை உதவிப் பதிவாளர்ப் பதவியில் அமர்ந்து, தம் நிலையை நன்குப் பயன்படுத்தி, நம் இன மக்களுக்கு என்னென்னவெல்லாம், எப்படி-யெப்படியெல்லாம் செய்யலாமோ அவற்றைச் செய்து காட்டினார். அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மறுநொடியே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துக்-கொண்டார். அய்யா கருத்துக்களைச் சொல்லி-விட்டால், நாயகம் அதை விளக்கிச் சொல்வார்; அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேர்த்து-விடுவார்.

சுயமரியாதை மணங்கள் அவரால் நிறைய நடத்தப்பெற்றன. பல நிகழ்ச்சிகளில் கலந்து-கொண்டு இயக்கக் கொள்கைகட்கு அருமை-யான விளக்கங்கள் கொடுத்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் ‘சர்வாதிகாரி’-யாகப் பொறுப்பேற்று நடத்திய வரலாற்றுக் கீர்த்தியை அடைந்தார். இப்போரில் கைதாகி 18 மாதச் சிறை வாழ்க்கைப்பட்டு, தம் உடல் நலம் பெரும் கேடுற்றும் இயக்கப் பிணைப்பைத் தளர்த்திக்கொள்ள நாயகம் முனைந்தது கிடையாது.

மூடநம்பிக்கைகளை உடைப்பது, பெண்ணுரிமைப் பேணுவது, பின்தங்கி-விட்டவர்களின் கல்வி ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தம் சிக்கன வாழ்க்கையின் பயனாகக் கிட்டிய பொருளையெல்லாம் கல்விக் கூடங்களை அமைத்து நம் இன மக்களுக்குப் பயன்படுமாறு செலவிட்டார்.
அய்யா-_ மணியம்மையார் திருமணம் என்ற எதிர்காலம் பற்றிய தொலைநோக்குள்ள ஏற்பாடு திட்டமிடப்பட்டபோது, அந்தத் திருமணப் பதிவு நடத்தப்படத் தேர்ந்தெடுக்கப்-பட்ட இடம் நாயகம் அவர்களின் இல்லம்தான்.

தம் வாழ்நாள் முழுதும் பிற்படுத்தப்பட்ட _ ஒடுக்கப்பட்ட மக்கட்காகவே உழைத்து வந்த நாயகம் 13.12.1944இல் இயற்கை எய்தினார். அவரது உருவச்சிலையொன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள ‘தியாகராயர் உயர்நிலைப்பள்ளி’யின் முன்னால் நிறுவப்-பட்டுள்ளது.

அவர் மறைந்தபோது ‘குடிஅரசு’ ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய துணைத் தலையங்கம்.

“நம் அன்பர் ஆருயிர்த் தோழர் சி.டி.நாயகம் முடிவெய்திவிட்டார். இனி அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இல்லை என்கின்ற நிலையில், உண்மையாய் உழைத்து வந்த உத்தமர் மறைந்தார்.எளிய வாழ்க்கை உள்ளவர். அதனால் மீதப் பணத்தையெல்லாம் கல்விக்குச் செலவு செய்தவர், நினைப்பதுபோல் பேசுபவர், பேசுவதுபோல் நடப்பவர்.
உண்மையில் கண்ணியமானவர். வேஷத்திற்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் எதுவும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட பெரியார் முடிவெய்தினது நமக்கு மாபெரும் நட்டமென்றே சொல்லுவோம். அதுவும் பரிகரிக்க முடியாத நட்டமென்றே சொல்லு-வோம்.

அவரது குடும்பத்தார் பகுத்தறிவுவாதிகள், அவர்களுக்கு எவருடைய ஆறுதலும் தேவை இருக்காதென்றே கருதுகிறோம்.

தமிழ் மக்கள் ஆங்காங்கு கூட்டம்கூட்டி அவர்களது அனுதாபத்தை அக்குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.

நாயகம் அய்யா அவர்களைப் போலவே இருந்து உழைத்துவந்த அவரது வாழ்க்கைத் துணைவியார் தோழர் சிதம்பரம் அவர்கள் அய்யா அவர்கள் விட்டுப்போன காரியங்களை பின்தொடர்வார்கள் என்று உறுதி நமக்கு உண்டு.


குறிப்பு ஆதாரம்


1.குடிஅரசு’ _ 16.12.1944 

2.உண்மை இதழ், 1-15.10.2016


கடைசியாக திருத்தப்பட்ட நாள்; 20.10.2026

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938)

  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938) ஈ.வெ.ரா. அவர்களுக்கு 'பெரியார்' என்று பட்டம் கொடுத்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு! தந்தை...