மாயூரம் வேதநாயகம்

மாயூரம் வேத நாயகம் பிள்ளை, தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், சமூக சேவகர் மற்றும் நீதிபதி ஆவார். கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த சவரிமுத்துப் பிள்ளை, ஆரோக்கிய மேரி இணையருக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேளாண் குளத்தூரில் 1826 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் பிறந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தரங்கம்பாடி நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் முதல் இந்திய நீதிபதியாகப் பதவியேற்றவர் வேதநாயகம் பிள்ளை. பின்னர் சீர்காழி, மயிலாடுதுறை உட்படப் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்தாலும் மாயூரத்தின் மேல் கொண்ட அன்பால், தனது பெயருக்கு முன்னால் அதனைச் சேர்த்துக்கொண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று ஆனவர்.
தனது தந்தையிடமும், பின்னர் புலவர் தியாகராச பிள்ளை என்பவரிடமும் தமிழ் மொழியைக் கற்றார். சமஸ்கிருதம், பிரெஞ்சு மற்றும் லத்தீன் மொழிகளையும் அறிந்திருந்தார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.
நீதித்துறைப் பணி
திருச்சியில் ஆவணக் காப்பாளராகப் பணியில் சேர்ந்து, பின்னர் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். சட்டம் பயின்று, 1860 ஆம் ஆண்டில் மாயூரம் (தற்போதைய மயிலாடுதுறை) மாவட்ட முன்சீஃப் (மாவட்ட நீதிபதி) ஆகப் பொறுப்பேற்று 13 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் மாயூரம் முன்சீஃப் என அழைக்கப்பட்டதால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எனப் புகழ் பெற்றார். இவர் தென்மாநில நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
சமூகப் பணிகள்: இவர் பெண் கல்வியை ஊக்குவித்தார். மாயவரத்தில் பெண்களுக்காகப் பள்ளியைத் தொடங்கினார், இது தமிழ்நாட்டில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளிகளில் ஒன்று. 1876-1878 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது தனது சொத்துகள் அனைத்தையும் ஏழை மக்களுக்குக் கொடையளித்தார்.
தமிழ்ப் பணி
வேதநாயகம் பிள்ளை தமிழ் உரைநடையை வளம்பெறச் செய்த முன்னோடிகளில் முக்கியமானவர்.
பிரதாப முதலியார் சரித்திரம் (1879) இதுவே தமிழில் வெளியான முதல் நவீன புதினம் ஆகும். பெண் கல்வி, பெண்கள் விடுதலை, சமூக சீர்திருத்தம் போன்ற தனது கருத்துகளை இப்புதினத்தின் மூலம் வெளிப்படுத்தினார். சுகுண சுந்தரி இவருடைய மற்றொரு நாவலாகும்.
வேதநாயகம் பிள்ளை, நீதியாளர், சமூக சேவகர், தமிழ்ப் புலவர் மற்றும் முதல் தமிழ் நாவலாசிரியர் எனப் பன்முகத் திறமையுடன் வாழ்ந்தவர். இவரது எழுத்துகள் எளிய தமிழில் அமைந்து மக்கள் மனதில் நீதியையும், பெண் கல்வி போன்ற புதிய சிந்தனைகளையும் விதைத்தன.
குடும்பம்
வேதநாயகர் தம் 25 ஆம் அகவையில் (1851 இல்) காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பாரைத் திருமணம் செய்திருந்தார். சிறிது காலத்திற்குப்பின், பாப்பம்மாள் இறந்துவிடவே, தன் தமக்கையான ஞானப்பூ அம்மாளின் மகள் இலாசர் அம்மையாரை இரண்டாம் தாரமாக ஏற்றார். சில ஆண்டுகள் கழித்து, அவரும் இறைந்துவிடவே, புதுச்சேரியைச் சேர்ந்த மாணிக்கத்தம்மையாரை மணந்தார். அவர் ஞானப்பிரகாசம், சவரி முத்தம்மாள், இராசாத்தியம்மாள் என்ற மூன்று மக்களைப் பெற்றபின், முன்னவர் போலவே இறந்தார். அதன் பிறகு புதுவை அண்ணுக்கண்ணம்மாளை மணந்தார். அவரது மறைவுக்குப் பின் அம்மாளம்மாள் என்பவரை மணந்தார். அவரும் தன் கணவனுக்கு முன்னதாகவே காலமாகிவிட்டார். இங்ஙனம் தான் மணந்த மனைவியர் ஐவரும் இற்ந நிலையில், தம் இறுதிக் காலத்தில், தனியராகவே வாழ்த்து, 1889 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாளில் தமது 63 ஆம் வயதில் மறைவுற்றார்.
வேதநாயகம் பிள்ளையின் கல்லறை, மயிலாடுதுறை,
ரோமன் கத்தோலிக்க கல்லறை தோட்டம்
குறிப்பு ஆதாரம்
1. விடுதலை நாளேடு, 11.10.26
கடைசியாக திருத்தப்பட்ட நாள்
13.10.26


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக