சனி, 14 நவம்பர், 2026

தேவதாசி ஒழிப்புச் சட்டம் கடந்து வந்த பாதை

 தேவதாசி ஒழிப்புச் சட்டம் கடந்து வந்த பாதை


இந்துக் கோயில்களில் பெண்களுக்கு பொட்டுக் கட்டி விட்டு வைப்பதால் நாட்டில் விபசாரத் தனத்திற்கு செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட ஏதுவாய் இருப்பதால் அத்தகைய செயல்கள் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தோடு திருமதி. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் 1930 இல் ஒரு சட்டம் தயார் செய்யப்பட்டு சென்னை மாகாண சட்டசபைக்கு அனுப்பப்பட்டது. இச்சமூக கொடுமையை ஒழிக்க 1968ஆம் ஆண்டு முதலே பல்வேறு காலகட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. 1924ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 14 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கே பொட்டுக் கட்ட வேண்டும் என்றிருந்த வழக்கத்தை மாற்றி. 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு பொட்டுக் கட்டுவது தண்டனைக்குரிய குற்றமென்று ஆக்கப்பட்டதோடு, அதற்கென இந்தியன் பீனல் கோடு 372, 373 சட்டங்கள் திருத்தப்பட்டன. இக்கொடுமை யிலிருந்து பெண் சமுதாயத்திற்கு நிரந்தரத் தீர்வு காண டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டார் (23.3:1930) டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் கொண்டு வந்த மசோதாவில் பொட்டுக் கட்டும் வழக்கத்தை சட்டப்படி குற்றமாக்கவும், பொட்டுக் கட்டி விடப்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி உரிமை அளிக்கவும், பொட்டுக் கட்டுதல் முதலிய சடங்குகளை மேற்கொள்வோரைச் சட்டப்படி தண்டிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.


'குடிஅரசு'- 30.03.1930


டாக்டர் முத்துலட்சுமி அம்மாளின் மசோதா சட்டசபையில் விவாதத்திற்கு வந்தபோது சட்டசபை உறுப்பினர்கள் பலர் ஆட்சேபனை தெரிவித்தனர். எனவே, பொதுமக்களின் அபிப்பிராயத்தை அறிந்து அதன்படி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அம்மசோதாவின் நகல் ஒன்றை பெரியாருக்கு அனுப்பி அவரது அபிப்பிராயத்தைக் கேட்டனர். நீண்ட காலமாகவே இருந்து வரும் இக் கொடுமைக்கு தீர்வு காண வேண்டிய அரசாங்கமே. இது விஷயமாக பொதுமக்களின் அபிப்பிராயத்தைக் கேட்பது கோமாளித்தனமானது என்றார் பெரியார். பொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் ஆட்சேபனைகளை கிளப்பி அச்சட்டம் நிறைவேறுவதற்குத் தடையாகவிருந்த சட்டசபை மெம்பர்களையும் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக ஓட்டளித்ததையும் வன்மையாகக் கண்டித்தார். அச்சட்டம் நிறைவேறாவிட்டால் அரசாங்கத்தாரும் ஜஸ்டிஸ் கட்சியாரும் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரித்தார்


'குடிஅரசு' - 23.03.1930


ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டம் கூட்டி அம் மசோதாவிற்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றி சட்டசபை காரியதரிசிக்கு பொதுமக்கள் அனுப்பி வைக்க வேண்டுமென்று பெரியார் கேட்டுக்கொண்டார்.


'குடிஅரசு' - 30.03.1930


மேற்படி மசோதா சம்பந்தமாக தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்துச் சட்டசபை காரியதரிசிக்கு, பெரியார் அனுப்பிய கடிதத்தில், இந்துக் கோயில்களில் சில பெண்களைப் பொட்டுக்கட்டி விடுவதால் அவர்கள் விபசாரிகளாகவும் அதன்மூலம் மேக வியாதி பரவவும் ஏதுவாயிருப்பதால் அதனைத் தடுக்க வேண்டியது அவசியம் என்றும், டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் மசோதா மதத்தின் பேரால் விபசாரம் பரவாமல் தடுக்க வகை செய்கிறது என்றும், மைனர் பெண்களுக்குப் பொட்டுக் கட்டக் கூடாதென்று ஏற்கெனவே சட்டம் இயற்றப்பட்டு அதன்மூலம் மத விதிகள் மீறப்பட்டு விட்டதால் சாத்திரங்களுக்கு பயந்து அரசாங்கம் சட்டமியற்றுவதிலிருந்து பின்வாங்கக் கூடாதென்றும். இந்து சமூக சுயமரியாதையை உத்தேசித்து தாம் அம்மசோதாவை மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.


'குடிஅரசு' -30.03.1930


11.5:1930இல் ஈரோடு இரண்டாவது சுயமரியாதை மாநாட்டையொட்டி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் தலைமையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் இந்திய சட்டசபையில் திரு ஜெயகர் அவர்களாலும் சென்னை சட்டசபையில் திருமதி முத்துலட்சுமி அவர்களாலும் குடிஅரசும், ரிவோல்ட்டும் ஏராளமாகச் சென்றன. அவ்விடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் தோன்றின. வெளிநாடுகளிலிருந்து பெரியாருக்கும் அவரது தோழர்களுக்கும் அழைப்புகள் வந்தன. தமிழ்நாட்டிலும் மலையாளத்திலும் இவ்வியக்கம் மிகவும் வலுப்பெற்றது. அங்குள்ள ஈழவர்கள் அனைவரும் இதனை ஆதரித்தனர். 1930 ஜூலை மாதத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெரியாரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அவ்விழாவிற்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் S.N.D.P. யோகம் என்ற ஈழவர் சங்கத்தின் காரியதரிசியுமான திரு.எம். கோவிந்தன் அவர்கள் தலைமை வகித்து பேசும்போது,


"கோட்டயத்தில் நடைபெற்ற S.N.D.P. மாநாட்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி செய்த சொற்பொழிவை ஆதரித்தும் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவை விரைவில் சட்டமாக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


'குடிஅரசு' 18.5.1930


-தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆண்டு மலர், 17.09.2024, பக்கம்-142,143




ஞாயிறு, 8 நவம்பர், 2026

வீரமாமுனிவர்


தமிழ் எழுத்து சீர்திருத்த முன்னோடி..மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்..,...
தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்..
வீரமாமுனிவர் (8/11/1680 - 4/2/1747)..
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோனில் பிறந்தார். இவரின் இயற்பெயர் "கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi)"..
இயேசு சபையைச் சேர்ந்த குரு, கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்..

அவரின் பணிகள்..
தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்..

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும்..

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்..

உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தார்...

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்..

1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது.. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்..

காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு...

வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்..

இவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது. இந்நூல்கள் பாடல் வடிவில் உள்ளன.
நசகாண்டம்.
நவரத்தின சுருக்க மாலை.
மகா வீாிய சிந்தாமணி.
வைதிய சிந்தாமணி.
சுரமஞ்சாி.
பூவரசங்காய் எண்ணெய்.
மேகநாதத்தைலம் கலிவெண்பா.
பஞ்சாட்சர மூலிகை எண்ணெய்(ஆனந்தகளிப்பு).
சத்துருசங்கார எண்ணெய்(நொண்டிச் சிந்து).
வீரமெழுகு.
முப்புசூத்திரம்(நொண்டிச் சிந்து).
அனுபோகவைத்திய சிகாமணி.
வீாிய சிந்தாமணி இரண்டாம் பாகம்.
குணவாடகம்.
நிலக்கண்ணடாடி..

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938)

  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938) ஈ.வெ.ரா. அவர்களுக்கு 'பெரியார்' என்று பட்டம் கொடுத்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு! தந்தை...