பெரியார்
தந்தை பெரியார் என்ற பட்டப்பெயரின் ஏனைய பயன்பாடுகளுக்கு தந்தை பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழ்நாட்டின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பன சனாதன தர்மம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தமிழ்நாடு அரசு இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாக(செப்17) அறிவித்தது.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் இந்திய நாடு முழுக்க சமூகப் பரப்பிலும், அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இருந்தாலும் திராவிட நாட்டு பகுதியிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் பங்கு தாக்கங்களை ஏற்படுத்தியவை..இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் பெரியார், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
வாழ்க்கை
பெயர்க்காரணம்
குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது.
'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ. வெ. இராமசாமிப் பெரியார்' என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளையே ஆவார் .
நவம்பர் 13- 1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றி வந்த சமுதாயப் புரட்சிப் பணிகளால் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் போற்றி அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர் 'பெரியார்' என அழைக்கப்பட வேண்டுமென்று மாநில பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்களால் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இளமைக் காலம்
ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் , செப்டம்பர் 17,1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் கன்னட மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருட்டிணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர் ஆவர்.
இளமைக் காலத் தோற்றம்
1929 இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் முகமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி கன்னடம் ஆகும். பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு (பத்து வயது) வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும், இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.
குடும்பம்
இராமசாமியின் 19ஆவது வயதில் அவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மை தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு ஆண்டுகளில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை அய்ந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
தனது அண்ணன் மகன் ஈ. வெ. கி. சம்பத்தை திராவிடர் கழகத்தின் எதிர்காலத் தலைவராக நியமிப்பதாக இருந்தார். ஆனால் சம்பத் அண்ணாதுரையின் சீடராக விளங்கியதால், பெரியார் தமது 70-ஆவது வயதில் 32 வயதுடைய காந்திமதி எனும் மணியம்மையை மணந்தார். இத்திருமணத்தால் திராவிடர் கழகத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்ணாதுரை போன்ற தலைவர்கள் இராமசாமியை விட்டுப் பிரிந்தனர். ஈ. வெ. இராமசாமி, மணியம்மையை தனது சொத்துக்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் பாதுகாவலராக நியமித்தார்.
காசிப் பயணம்
1904இல் இராமசாமி, இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பார்ப்பனர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.
இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பார்ப்பனரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பார்ப்பனரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பார்ப்பனர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பார்ப்பனர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பார்ப்பனர் யாரும் இந்து சாத்திரத்தின்படி, இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.
பசிதாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிக்கொண்டார். பார்ப்பனரல்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு உணவு வழங்கப் பார்ப்பனர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றத்தாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின், தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார்.
அரசியல் வாழ்வு
காங்கிரசு கட்சியின் உறுப்பினர்
(1919–1925)
இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்துப் பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், தனக்கு உரிமையான தோப்பில் உள்ள 'கள்' தரக்கூடிய 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 (நவம்பர்)இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி ஒரு மாதம் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரான கண்ணம்மாளும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.

1922 இல் இராமசாமி சென்னை இராசதானியின் (மதராசு இராசதானி) காங்கிரசு கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரசு கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரசு கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார்.
வைக்கம் போராட்டம்
(1924–1925)
கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் (சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி. கே. மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும், அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னி பெசண்டின் உதவியையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தை நடத்த அனுமதிக்காத காந்தியின் செயலையும் மீறி, அவரின் வழியான (சத்தியாகிரக) அறப்போராட்டமாக முன்னெடுத்தார்.
நாடெங்கிலும் இருந்து காங்கிரசு தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரசு தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ. பி. கேசவமேனன், இ. எம். எசு., ஏ. கே. கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள்.19 பேர் சிறை பிடிக்கப்பட்டவுடன் போராட்டம் தொய்வுற்றது. சிறையிலிருந்தவாரே மற்றவர்கள் மூலம் தமிழ் மாநில காங்கிரசு தலைவராகவிருந்த இராமசாமிக்கு, 'உடனே புறப்பட்டு வந்து தலைமையேற்று போராட்டத்தை நடத்துமாறுய மூன்று முறை தந்திகளை அனுப்பினர். தமிழ்நாட்டில் இருந்து ஈ. வெ. ரா, கோவை அய்யாமுத்து, எம். வி. நாயுடு ஆகியோர் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ. வெ. ரா முக்கியமான பங்கு வகித்து இரண்டு முறை சிறை சென்றார். ஈ. வெ. ரா அந்தப்போரில் பங்கெடுத்து இறுதிவரை போராடினார்.(!924-1925)

ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச்(அருவிக்குத்து) சிறையில் அடைக்கப்பட்டனர்.மீண்டும் போராட்டம் செய்ததால் இரண்டாவது முறையாக 22.05.1924இல் கைது செய்யப்பட்டு 'பசுப்புரா' சிறையில் அடைக்கப்பட்டார். மொத்தம் 74 நாள் சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டத்திற்காக ஈ. வெ. ரா ஏழு முறை கேரளா சென்றுள்ளார்.காந்தியின் அறிவுறுத்தலின்படி, இப்போராட்டத்தில் கேரளாவைச் சாராதவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் பஞ்சாப்பிலிருந்து வந்து சீக்கியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாகம்மாள் கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தார். கடைசியில் போராட்டம் வெற்றி ஈட்டியது. அரசர் இறந்ததால் இராணியார் ஏற்பாடு செய்த அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாசு காந்தியும் போராட்டக்குழு சார்பில் இராசாசியும் கையெழுத்திட்டனர்.
இராணியார் அனைத்து சாதியினறும் வைக்கம் கோவில் தெருக்களில் செல்ல அனுமதித்து ஆணை வெளியிட்டார்.
இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். (வைக்கம் வீரர் என முதன் முதலாக தி.ரு.வி.க.கூறினார்)பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது.
பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆலயப்பிரவேச இயக்கமாகக் தந்தை பெரியாரால் கொண்டு செல்லப்பட்டது. 'மகத் குளத்தில் நீர் அருந்தும் போராட்டத்'திற்கு 'இராமசாமியின் வைக்கம் போராட்டமே உந்து சக்தியாக இருந்த்து' என டாக்டர் அம்பேத்கர் கூறினார்..
சுயமரியாதை இயக்கம்
இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பார்ப்பனரல்லாதோர், தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.
- சுயமரியாதையாளர்கள் பார்ப்பனப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.
- ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.
- சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
- அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுப்பாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது.
- கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.
- இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராசு அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928லேயே வலியுறுத்தியது.
- பகுத்தறிவு சமத்துவ (ஏற்றத் தாழ்வற்ற) சமுதாயம் அமைய வலியுறுத்தினர்..
இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாக இராமசாமி 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் தொடக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எசு.குருசாமி மேற்பார்வையில் மதராசு இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராசு இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி செய்தது.
செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாடு
25.08.1929 - குடிஅரசிலிருந்து... சுயமரியாதை இயக்கத்தின் சமய சமுக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மா னங்களே போதிய அத்தாட்சியாகும்.
1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்ன வென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.
2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.
3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. 4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங் களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.
5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.
7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.
8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில் களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத் திற்கும் வேதம் படிப்பதற் கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய் யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத் தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளா தார உணர்ச்சி ஆகியவை களுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விஷயத்தில்; பெண் களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.
12. தீண்டப்படாதார் விஷயத்தில், தீண்டப் படாதார்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப் பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.
இத்தீர்மானங்களே உலகை திருப்பிப்போட்ட தீர்மானங்களாகும்.
6ஆவது தீர்மானத்தின் படி அனைவரும் உடனே பெயருக்கு பின் ஒட்டாகவிருந்த ஜாதி பெயர்களை துறப்பதாக அறிவித்தனர்.
மத மறுப்பு, இறை மறுப்பு - 1931
1931 ஆகஸ்ட்டு விருது நகர் சுயமரியாதை இயக்க மாநாட்டு தீர்மானங்களுக்கு பின் மத மறுப்பு, இறை மறுப்பு கொள்கைகளை சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்தது.[1]
25.08.1929 - குடிஅரசிலிருந்து... சுயமரியாதை இயக்கத்தின் சமய சமுக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மா னங்களே போதிய அத்தாட்சியாகும்.
1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்ன வென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.
2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.
3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. 4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங் களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.
5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.
7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.
8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில் களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத் திற்கும் வேதம் படிப்பதற் கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய் யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத் தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளா தார உணர்ச்சி ஆகியவை களுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விஷயத்தில்; பெண் களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.
12. தீண்டப்படாதார் விஷயத்தில், தீண்டப் படாதார்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப் பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.
இத்தீர்மானங்களே உலகை திருப்பிப்போட்ட தீர்மானங்களாகும்.
6ஆவது தீர்மானத்தின் படி அனைவரும் உடனே பெயருக்கு பின் ஒட்டாகவிருந்த ஜாதி பெயர்களை துறப்பதாக அறிவித்தனர்.
மத மறுப்பு, இறை மறுப்பு - 1931
1931 ஆகஸ்ட்டு விருது நகர் சுயமரியாதை இயக்க மாநாட்டு தீர்மானங்களுக்கு பின் மத மறுப்பு, இறை மறுப்பு கொள்கைகளை சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்தது.[1]
வெளிநாடு சுற்றுப்பயணம்
(1929–1932)
1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலாக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எசு.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம்மேற்கொண்டார். எகிப்து, கிரீசு, துருக்கி, உருசியா, செருமனி, இங்கிலாந்து, சுபெயின், பிரான்சு, மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியா திரும்பினார்.
இச்சுற்றுப்பயணங்கள் இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. உருசியாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடைய கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் இராமசாமியின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை. இராமசாமி திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம். சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இராமசாமியின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழ்நாட்டில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.
இந்தி எதிர்ப்பு
1937 இல் இராசகோபாலாச்சாரியார் மதராசு மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில், இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராசாசி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்கத் திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார். இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாகப் பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன.
இந்தி எதிர்ப்பு தமிழர் பெரும்படை
இந்தி எதிர்ப்பு தமிழர் பெரும்படை 1-8-1938 அன்று திருச்சியில் புறப்பட்டு 11-9-1938 அன்று சென்னையை அடைந்தது. தமிழர் பெரும்படைக்கு சென்னை கடற்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி குடிஅரசு 18-9-1938.
நீதிக்கட்சித் தலைவராக
(1938–1944)
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு தொடங்ககப்பட்டது. பார்ப்பனர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் தொடக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பார்ப்பனர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பார்ப்பனரல்லாதாரை ஒடுக்க, பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.
1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராசு மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது.
நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939, இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார்( 29.12.1938). அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் சிலர் தந்தை பெரியாரின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.
திராவிடர் கழகம்
(1944-முதல்)
திராவிடர் கழகம் உருவாதல்
1944 இல் நீதிக்கட்சித் தலைவராக தந்தை பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என தந்தை பெரியாரால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் தந்தை பெரியார் நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பொ. தி. இராசன், தலைமையில் தொடங்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது.
திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய்மொழித் தாக்குதல்களைத் தொடுக்கலாயினர். 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும், இறைமறுப்பாளர்களாகவும்,பகுத்தறிவாளர்களாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் இவற்றில் தனிக்கவனம் செலுத்தினர்.
திருவள்ளுவர் குறள் மாநாடு -1949
திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது சென்னை இராயபுரத்தில் 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் நாள்களில் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டுக்கான அழைப்பில், பெரியார் பின்வருமாறு கூறுகிறார்: "குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்."
குழந்தைகள் காப்பகம்
1961 ஆம் ஆண்டு முதல் அரசு நிதி உதவியுடன் நாகம்மையார் அனாதைப் ( இல்லம் அனாதை என்ற பெயரோடு செயல்பட வேண்டுமென்பது அரசு விதிமுறையாகும்) பெண்கள் இல்லமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற அனாதை இல்லங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகள், பள்ளி வயது என்று சொல்லப்படும் 6 வயது முதல் 18 வயதிற்குள் இருந்தது. பள்ளியில் சேர்ந்து படித்தால் மட்டுமே அரசு நிதி உதவி வழங்கப்படும் என்பது நிதியுதவி விதி முறைகளில் உள்ள நிபந்தனையாகும்.
6 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளை இவ்வில்லத்தில் சேர்த்து வளர்க்க அரசு விதிமுறைகளில் இடமில்லை. இத்தகைய குழந்தைகளைப் பராமரிக்க பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம் எனத் தனியாக உருவாக்கப்பட்டு,(09.08.1967இல் அடிக்கல் நாட்டப்பட்டது.) 6 வயதிற்கும் குறைவான குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். தாய், தந்தையற்ற இக்குழந்தைகளுக்கெல்லாம் பெயருக்கு முன்னால் ஈ.வெ.ரா.ம (ஈ.வெ.ராமசாமி மணியம்மை) என்ற முதல் எழுத்துகள் சேர்க்கப்பட்டு பதிவேடுகளில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன.
அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு
1949 இல் தந்தை பெரியாரின் தலைமைத் தளபதியான காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை 17 செப்டம்பர் 1949 அன்று சென்னையில் தொடக்கினார். இந்தப் பிரிவுக்கு தந்தை பெரியார் மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. தந்தை பெரியார் திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். தந்தை பெரியார் தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் தந்தை பெரியார் தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், சூலை 9, 1948 அன்று தந்தை பெரியார் , தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர்.
அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால், அண்ணாதுரையின் திமுக கட்சியை, கண்ணீர்த்துளி கட்சி என அதுமுதல் தந்தை பெரியார் வர்ணிக்கலானார். அதன் பின், பெரியாருக்காக திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது என அண்ணாதுரை அறிவித்தார். அண்ணாதுரை தமிழ் நாட்டு முதல்வரானவுடன் நேராக புறப்பட்டு சென்று திருச்சியிலிருந்த.தந்தை பெரியாரை சந்தித்து வருத்தம் தெரிவித்ததுடன் 'இந்த ஆட்சி தந்தை பெரியாருக்கு காணிக்கை' என்று கூறினார். அண்ணாதுரை மறைவின் பின் திமுக தலைவராக தந்தை பெரியாரின் வாழ்த்துதலுடன் மு.கருணாநிதி பொறுப்பு ஏற்றார்.
1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு
தந்தை பெரியார் 1957 தேர்தலில் காங்கிரசை முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களைப் பிடித்தது.
இறுதிக் காலம்
1953 மே 27இல் புத்தர் விழா கொண்டாடப்பட்டு, அன்று மாலை தமிழ் நாடெங்கும் பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
1956 ஆகஸ்ட்டு 01இல் சென்னை, மெரினாவில் வைணவ இந்துக் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய தந்தை பெரியாருக்குத் தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன்னால், கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தந்தை பெரியார் அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்திய அரசியல் சட்டம் எரிப்பு
26.11.1957 செவ்வாய்க்கிழமை, ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி, தந்தை பெரியாரின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் இந்திய அரசியல் சட்டம் எரிக்கப்பட்டது. திருச்சியில் மட்டுமே 3000க்கும் மேற்பட்டோர் சட்டத்தை எரித்தனர்! தந்தை பெரியாரை முன்கூட்டியே 25.11.1957ஆம் நாள் அரசு திருச்சியில் கைது செய்தது.
மயிலாடுதுறை வட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்ற தோழர்களுடன் தந்தை பெரியார்
1958 இல் தந்தை பெரியார் மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் தந்தை பெரியார் ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார்.
1962 இல் தந்தை பெரியார் தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் வட இந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
யுனெஸ்கோ விருதுதந்தை பெரியாரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி 1970 சூன் 27 அன்று யுனெஸ்கோ மன்றம்' என்ற யுனெஸ்கோவின் அனுமதி பெற்ற இந்திய அமைப்பு,
' புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்கிரடிசு; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி'
Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)
என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
பெரியார் பட்டம்
சென்னையில் ஆணைகவுனி அருகில் உள்ள ஒற்றைவாடை தெவிலுள்ள ஶ்ரீ லெட்சுமி விலாச நாடகச்சபை[2] அரங்கத்தில் நவம்பர் 13- 1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றி வந்த சமுதாயப் புரட்சிப் பணிகளால் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் போற்றி அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர் 'பெரியார்' என அழைக்கப்பட வேண்டுமென்று மாநில பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்களால் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதழ்கள், ஏடுகள் மற்றும் நாளிதழ்கள்
ஈ.வெ.ராமசாமி தன்னுடைய கருத்துகளைப் பரப்புவதற்காகப் பின்வரும் இதழ்களை வெளியிட்டு வந்தார்:
- குடிஅரசு (வார இதழ்) 1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது.
- ரிவோல்ட் (Revolt) (ஆங்கில வார இதழ்) 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது. முதல் இதழை கோவை இரத்தினசபாபதியார் தலைமையில் பட்டிவீரன்பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் 6-11-1928ஆம் நாள் வெளியிட்டார். இதழுக்கு ஈ.வெ.இராவும் எசு. இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர்; நாகம்மையார் வெளியீட்டாளர்.
- ஜஸ்டிசைடு (Justicite).
- புரட்சி (வார இதழ்) 1933 நவம்பர் 20 ஆம் நாள்தொடங்கப்பட்டது. 17.6.1934ஆம் நாள் இறுதி இதழ் வெளிவந்தது.
- பகுத்தறிவு (நாளிதழ்).1934 ஏப்ரல் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டு 1934 மே 27ஆம் நாளோடு நிறுத்தப்பட்டது
- பகுத்தறிவு (வார இதழ்) 1934, ஆகஸ்ட்டு 26 ஆம் நாள் முதல் 1935 சனவரி 1ஆம் நாள் வரை 20 இதழ்கள் வெளிவந்தன.
- பகுத்தறிவு (மாத இதழ்) 1935, மே 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது 1939 சனவரி வரை வெளிவந்தது.
- விடுதலை (வாரம் இருமுறை) 1935, சூன் 01ஆம் நாள் தொடங்கப்பட்டது.
- விடுதலை (நாளிதழ்) 1937, சூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது
- உண்மை (மாத இதழ்)
- தி மார்டர்ன் இரேசனலிசிட்டு (The Modern Rationalist) (ஆங்கில மாத இதழ்) 1971 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது.
3.
நெ.து.சுந்தரவடிவேலு
அவர்களின்
'புரட்சியாளர் பெரியார்
' என்கின்ற நூலை (1979) தமிழ் நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித் துறை
சார்பில் 2014 ஆம் ஆண்டு
மறுபதிப்பு
செய்து வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற பெரியார், வேலூர் சி. எம். சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பெரியார், சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
விமர்சனங்கள்
- தந்தை பெரியார் மத மூடநம்பிக்கைகளையும், பார்ப்பன தத்துவங்களையும், இந்து மத இதிகாசம் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எதிர்த்தார். பிற மதங்களைப் பற்றி அவர் விமர்சித்துள்ளார்.
- பாரதியாரை, கிறுக்கன் பாரதி என்று குறிப்பிடுகின்றார்.
- பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசம்" என்றும் தந்தை பெரியார் சிலப்பதிகாரத்தை விமர்சித்தார்.
- தமிழ் மொழியை "காட்டுமிராண்டி பாசை" என்றார். தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சி இல்லை எனவும் பழந்தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் நிறைந்து இருப்பதாகவும் அதற்குக் காரணம் சொன்னார்.
நினைவகங்கள்
தமிழ்நாடு அரசு (முதல்வர் கலைஞர்)தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் உட்கார்ந்த நிலையில் சிறிய அளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.இந்த இடம் அன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களால் நினைவகம் அமைக்க வழங்கப்பட்டது.
பெரியார் - அண்ணா நினைவு இல்லம் - ஈரோடு
வைக்கம்
கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தமிழ்நாடு அரசால் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.
தந்தை பெரியார் நினைவகம்
நினைவிடம் - சென்னை
சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழகத்தின் தலைமை இடமான பெரியார் திடல் எனப்படும் பெரியார் மய்யத்தில் 'பெரியார் அருங்காட்சியகம்' ஆய்வு நூலகமும் எணினி நூலகமும் உள்ளது. 1500.பேர் உட்காரக்கூடிய 'எம்.ஆர்.ராதா மன்றம்' என்கின்ற அரங்கம் உள்ளது. ஒரு பகுதியில் 'தந்தை பெரியாரின் நினைவிடம்' உள்ளது.
தந்தை பெரியாரின் நினைவிடம்'
உருவச் சிலை
தந்தை பெரியாரின் நினைவிடத்தின் நுழைவு வாயிலில் 21 அடி உயர தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது.
நூற்றாண்டு விழா
தமிழ் நாடு அரசு (முதல்வர் எம.ஜி.ஆர்.) சார்பிலும் திராவிடர் கழகம் சார்பிலும் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா (1979) நாடு முழுக்க கொண்டாடப்பட்டது.
பெரியார் மேளா
உத்திரபிரதேச மாநில தலை நகர் 'இலக்னோ' வில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 16,17,18 ஆகிய மூன்று நாள்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா 'பெரியார் மேளா' என்கின்ற பெயரில் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் ஏற்பாட்டில், அன்றைய முதல்வர் மாயாவதி அவர்கள் நடத்தினார்கள். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி ( தற்போது தலைவர்) அவர்கள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியா முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் தனி தொடர்வண்டி மூலமும் அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி தோழர்கள் தனி தொடர்வண்டி மூலமும் வந்து பங்கேற்றனர்.
பெரியார் நினைவு சமத்துவ புரம்
1997 முதல் தமிழ்நாடு அரசு(முதல்வர் கலைஞர்) சார்பில் பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் அமைக்கப்பட்டன.முதல் சமத்துவபுரத்தை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை.யில் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17- ஆம் நாள் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். 2011ஆம் ஆண்டு வரை 238 பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கலைஞர் கருணாநிதி ஏற்படுத்தினார்.
பல்கலைக்கழகம்
1.பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMU) தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லத்தில் 219 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது. பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியது. இதன் வேந்தராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளார்.
2.பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University) என்பது சேலத்தில் அமைந்துள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கு தந்தை பெரியார் பெயரிடப்பட்டது. பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய அவையின் தரத்தினைப் பெற்றது.
தந்தை பெரியார் வழங்கிய நிதி மற்றும் இடத்தில் கல்லூரி
24.08.1965இல் திருச்சிராப்பள்ளியில் காஜாமலை என்கின்ற இடத்தில் தந்தை பெரியாரால் கல்வி வளர்ச்சிக்காக(கல்லூரி கட்ட) 5.5 இலட்ச ரூபாயும், 20 ஏக்கர் நிலமும் அரசுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு கட்டப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு பக்தவச்சலம் அவர்கள் திறந்துவைத்தார். 2024 ஆண்டு திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி பெரியார் மய்யம்
1. பாம்நோலி
புதுடெல்லியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாம்நோலி என்கின்ற இடத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5மாடி கட்டிடம் 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை' (திராவிடர் கழகம்)யால் கட்டப்பட்டு 'பாம்நோலி' 'பெரியார் மய்யம்' கல்வெட்டு அன்றைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சத் அவர்களாலும், பெரியார் மய்ய வளாகம், உலக மனிதநேய அமைப்பின் தலைவர் லெவிஃபிராகல் அவர்களாலும் 01.10.2000 இல் திறந்துவைக்கப்பட்டது. இவ் விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து தனி இரயில் மூலம் 1000த்திற்கு மேற்பட்டோர் புறப்பட்டு வந்தனர். இதில் கல்வி நிலையமும், மருத்துவ மனையும், நூலகமும், பெரியார் மியூசியமும் செயல்படுகிறது.
மீண்டும் பாம்நோலி பெரியார் மய்யம்
இந்த 'பாம்நோலி' 'பெரியார் மய்யம்' 03.12.2000 இல் நியாய விரோத - சட்ட விரோதமாகவும், அரசியல் உள்நோக்கத்துடன், நீதி மன்ற தடையாணையையும் மீறி அரசால் இடித்து தள்ளப்பட்டது. சட்டப் போராட்டங்களுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் பெரியார் மய்யம் கட்டப்பட்டு செயல்பட்டுவருகிறது.
2. ஜசோலா
நீதி மன்ற ஆணையையும் மீறி வலுக்கட்டாயமாக ஒன்றிய அரசின் கட்டளையால், 'பாம்நோலி' பெரியார் மய்யம்' இடிக்கப் பட்டதற்கு நீதி கேட்டு போராடியதின் விளைவாக புதுடெல்லியில் 'ஜஸோலா' என்கின்ற இடத்தில் ஒரு ஏக்கர் அளவில் அரசால் நிலம் வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் ஏறக்குறைய 64,000 அடி சதுர பரப்பில், 10கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5மாடி கட்டிடம் 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை' (திராவிடர் கழகம்)யால் கட்டப்பட்டு 'ஜஸோலா' 'பெரியார் மய்யம்' அன்றைய தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் 02.05.2010 இல் திறந்துவைக்கப்பட்டது. இதில் கல்வி நிலையமும் மருத்துவ மனையும் செயல்படுகிறது.
திரைப்படம்
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பாக 'பெரியார்' என்கின்ற தந்தை பெரியாரின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் தயாரிக்கப்பட்டு 2007 மே-1இல் திரையிடப்பட்டது..தமிழ்நாடு அரசு(முதல்வர் கலைஞர்) சார்பில் இதற்கு சிறிதளவு நிதியும் வழங்கப்பட்டது. திரைப்படம் 100 நாளை கடந்தது. பிறகு தெலுங்கு மொழியிலும் வெளியிடப்பட்டது.
பெரியார் பெயரில் விருதுகள்
1.தமிழ்நாடு அரசு(முதல்வர் ஜெ.ஜெயல்லிதா) சார்பில் 'பெரியார் சமூகநீதி விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2.திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
3.திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 'பெரியார் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
4.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'பெரியார் ஒளி' விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
பெரியார் உலகம்
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 'பெரியார் உலகம்' என்கின்ற பெயரில் அறிவு வளர்ச்சி பூங்கா அமையவுள்ளது. அதில் 40 அடி உயர தாங்கு மேடையில் தந்தை பெரியாரின் 94 அடி உயர சிலை அமைக்கப்படவுள்ளது.

திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை
மறைக்கப்பட்ட புத்தகம்
1979 ஆம் ஆண்டு ம.கோ.இரா தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் குழு அமைத்து நெ.து. சுந்தரவடிவேலு அவர்களை தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றைச் சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது. 1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை.
கடைசியாக திருத்தப்பட்டது : 16.02.2026
உள்ளடக்கம்
- தொடக்கம்
- வாழ்க்கை
- குடும்பம்
- அரசியல் வாழ்வு
- இதழ்கள், ஏடுகள் மற்றும் நாளிதழ்கள்
- மறைவு
- விமர்சனங்கள்
- நினைவகங்கள்
- மறைக்கப்பட்ட புத்தகம்
- இவற்றையும் பார்க்க
- குறிப்புகள்
- சான்றுகள்
[1].
[2].நெ.து.சுந்தரவடிவேலு
அவர்களின்
'புரட்சியாளர் பெரியார்
'
- மேற்கோள்கள்
- மேலும் படிக்க
- வெளி இணைப்புகள்











.jpg)
















.jpeg)















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக