செவ்வாய், 27 ஜனவரி, 2026

சுந்தர்ராவ் நாயுடு

ஆதி திராவிடர்களின் உரிமைக் காவலர் சுந்தர்ராவ் 


- எக்ஸ்ரே. ந.அ. கருணாகரன் (கட்டுரையாளர்)


1916 நவம்பர் 20ல் தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக் கட்சியை சர். பிட்டி. தியாகராயர் தோற்றுவித்தார். அக்கட்சியின் வருடாந்திர புத்தகத்தை ஆங்கிலத்தில் அச்சடித்து வெளியிட்டு வந்தவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி திவான் பகதூர் T வரதராஜூலு நாயுடு BABL ஆவார். இவர் பிச்சைக்கார விடுதியையும், பார்வையற்றோர் பள்ளியையும் தோற்றுவித்தார்.

1920 முதல் 1923 வரை சென்னை நகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கௌரவ தலைவராக (President) சர். பிட்டி, தியாகராயர் விளங்கியபோது சென்னை நகராட்சியின் கல்விக்குழுவின் தலைவராக (Chairman) T.வரதராஜூலு நாயுடு விளங்கினார். சென்னை நகராட்சிப் பள்ளிகளில் முதன் முதலில் இவர்தான் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். 1920 ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு பள்ளியிலும் 1921-22ல் மேலும் அய்ந்து பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கப்பட்டன. இவர் கட்டாய ஆரம்பக் கல்வி (compulsory elementary education) திட்டத்தை முதல் முதலில் 1925-26ல் கொண்டு வந்து சென்னை நகரில் நான்கு பகுதிகளில் செயல்படுத்தினார்.

மாநகராட்சி பள்ளிகளிலுள்ள மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் திரு வரதராஜூலு நாயுடுவின் மகனான T சுந்தர்ராவ் மாநகராட்சிப் பள்ளிகளில் 1926ல் சாரணர் படையை முதன் முதலில் அறிமுகப் படுத்தினார். இவர் சென்னை மாநகராட்சி மாணவர் சாரணர் சங்கத்தின் மாவட்ட துணை ஆணையராக விளங்கினார். 

மாதிரி இல்லங்கள், சத் துணவுத் திட்டம் குழந் தைகள் காப்பகம் ஆகி யவற்றை முதன் முத லில் அறிமுகப்படுத்தியதே நீதிக் கட்சிதான்..

கேப்டன் உடையில் சுந்தர்ராவ்

1926-27ல் சென்னை நகரில் மூன்று பகுதிகளில் கட்டாய ஆரம்பக்கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழை எளிய குடும்ப பிள்ளைகளுக்கு இலவச கல்வி, புத்தகங்கள். சீருடைகள், மதிய உணவு ஆகிய அனைத்தும் வழங்கப்பட்டு, கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தை வலியுறுத்தியும் பெரும்பாலான குடும்பங்களில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்பாததற்கு காரணம் என்னவென்று அறிய திரு . சுந்தர்ராவ் அம்மக்கள் வாழுகின்ற பகுதிகளுக்கு தேரில் சென்று அவர்களது நிலையைக் கண்டு மனவேதனையடைந்தார். தொழிலாள குடும்பங்களில் பெரும்பாலோர் கணவன் மனைவி ஆகிய இருவரும் பணிக்குச் சென்று விட்டால் அவர்களது இல்லங்களில் சிறுவர் சிறுமிகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாமற் போவதால் அவர்களை கவனித்துக் கொள்ள பள்ளிக்குச் செல்லக் கூடிய வயதுள்ள பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளுகின்றனர். எனவே திரு T.சுந்தர்ராவ் முதன் முதலில் 1927ல் சென்னை கொய்யா தோப்பில் குழந்தைகள் வரவேற்பு இல்லம் (BABY WELCOME HOME) ஒன்றை துவக்கி அவர்களது அவல நிலையைப் போக்கினார். இத்திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் அவர் 1946-47ல் சென்னை மாநகரின் மேயராக விளங்கியபோது பிராட்வே பகுதியில் பி.ஆர்.என் தோட்டத்தில் மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் காப்பகம் ஒன்றைத் துவக்கினார். அக்காப்பகத்தை அன்றைய ஆளுநர் சர்ச் பால் எட்வர்ட் நை அவர்களின் துணைவியாரைக் கொண்டு திறந்து வைத்தார். அக்காப்பகத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு 

ஆதி திராவிடருக்குத் தனித்தொகுதி வழங்கச் கூடாது என்று காந்தி யார் பட்டினி மிரட்டல் செய்தபோது, அதை எதிர்த்து ஆதி திராவிட மக்களைத் திரட்டியவர் சுந்தர்ராவ்

விளையாடுவதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பிள்ளைகளை கவனித்துக் கொள்ள ஆயாக்களையும் உடல் நலத்தைப் பேணிக் காப்பதற்காக ஒரு பெண் மருத்துவரும் நியமிக்கப்பட்டார்கள். அப்பிள்ளைகள் வாரத்திற்கு மும்முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார்கள். இதன் கரணமாக அகில இந்திய மாணவர் நல்வாழ்வு சங்கம் மேயர் T சுந்தர்ராவ் அவர்களை சத்துணவின் வித்தகத் தந்தை என பாராட்டி அண்ணாரின் நூற்றாண்டு விழாவை 1988 டிசம்பர் 17ல் பெரியார் திடலில் கொண்டாடியது. விழாவிற்கு ஆதி திராவிட தலைவர்களான திரு. க. அயோத்திதாச பண்டிதர். திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் பேரன் திரு.பி. ஜெயகரன் அவர்கள் தலைமை வகித்தார். ஆதி திராவிட சமுதாய வீராங்களை மீனாம்பாள் சிவராஜ் அவர்களது புதல்வர் திரு. எஸ். தயாசங்கர்


1927ல் சென்னை கொய்யாத் தோப்பில் அமுல் நடத்தப்பட்ட சத்துணவுத் திட்டம்



1947ல் நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகம்

முன்னிலையில் நீதிபதி P வேணுகோபால் அவர்கள் மேயர். T. சுந்தர்ராவ் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். செட்யூல்டு சமுதாயத் தளபதி மு. சுந்தரராஜன், எஸ்.வி. பாலசுந்தரம், தமிழம் ஆசிரியர் பன்னீர்செல்வம், ந.அ. கருணாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். திரு. T. சுந்தர்ராவ் 1889 ஜனவரி 18ல் சென்னை புதுப்பேட்டையில் திருமதி அரங்கநாயகி அம்மாளுக்குப் பிறந்தார். அவரது பள்ளிப் படிப்பை சென்னை கிருஸ்துவ பள்ளியில் முடித்ததும், கிருஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஹாக்கி, போலோ, கால்பந்து, ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கங்களையும், கேடயங்களையும். கோப்பைகளையும் பரிசாகப் பெற்றார். குதிரை சவாரியிலும் நீச்சலிலும் சிறந்த வீரராக விளங்கினார். 1915ல் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1918ல் வழக்கறிஞர் பட்டம் பெற்று

நீதிக் கட்சி தலைவர் களில் ஒருவரான சுந்தர்ராவ் ஆதி திராவிட  மக்களின் உரிமைக் காவலராக விளங்கினார். 1927 ஆம் ஆண் டிலேயே குழந்தைகள் காப்பகம் துவங்கிய பெருமை அவரையே சாரும்.

 1919ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். 1928ல் சென்னையில் அற மன்ற நீதிபதியாக விளங்கினார். சென்னை பல்கலை கழகத்தின்பொது நிர்வாக சபையிலும், மாவட்டக் கல்விக் குழுவிலும் அங்கம் வகித்தார். பத்மவெலம் கல்வி அறக்கட்டளையின் செயலாளராகவும் விளங்கினார். T. சுந்தர்ராவ் கோப்பம்மாள் என்பவரை மணந்து மூன்று மகன்களுக்கும் நான்கு மகள்களுக்கும் தந்தையானார். பெரும் செல்வத்துடன் பட்டம் பதவிகளை இவர் பெற்றிருந்தும், தன் இளைய மகன்களான T வேணுகோபால் ராவ். T. நாராயண ராவ் ஆகியோரைக் கொய்யாத் தோப்பில் குடிசை வாழ் மக்கள் வாழும் பகுதியில் நாகப்ப முதலி தெருவிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் படிக்கச் செய்தார். செல்வத்தை செலவழிக்கக் கூடாது என்றோ அல்லது கஞ்சத்தனத்தாலோ அவர் அப்படிச் செய்யவில்லை.

மாநகராட்சிப் பள்ளியானாலும் தாழ்வாக ஒருவரும் கருதக் கூடாது. பிள்ளைகளுள் உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு தோன்றக் கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். சென்னையில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான பக்கிங்காங்-கர்னாடிக் துணி ஆலையில் 1921ல் திரு.வி. கலியாண சுந்தரனார். வாடியா, சக்கரை செட்டியார். செல்வதி செட்டியார். ராமானுஜூலு நாயுடு போன்ற காந்தியவாதிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். அந்த ஆலையை ஒழித்துக் கட்டி விட்டால் அத் தொழிலாளர்கள் வேலையை இழப்பார்கள். அப்படி இழந்த தொழிலாளர்களுக்கு கை ராட்டினம் வழங்க வேண்டுமென்பதற்காகவே. காந்தியார் ரூபாய் முப்பதாயிரத்தை தொழிற் சங்கத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆதி திராவிட மகாஜன சபையும், நீதிக் கட்சியும் தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு பணித்தனர். இதன் காரணமாக வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக ஆதி திராவிட மக்கள் பணிக்குச் சென்றார்கள். அம்மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சென்றார்கள் என்ற காரணத்தினால் சென்னை மாநகரில் ஆதி திராவிடர் குடியிருப்புகள் தாக்கப்பட்டன. புளியந்தோப்பு என்ற குடியிருப்பு அடியோடு எரித்து சாம்பலாக்கப்பட்டது. 1922 ஜனவரியில் இளவரசர் ஏழாம் எட்வர்ட் சென்னைக்கு வருகை தந்தபோது இது போன்ற தாக்குதல் நடந்தது. கலவரங்களை ஒடுக்க சென்னை மாநகராட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயரும் சென்னை மாநில முதல் மந்திரி பனகல் அரசரும் இளவரசர் வேல்ஸ் படை (Prince of Wales Corps) ஒன்றைத் தோற்றுவித்து அப்படையின் தளபதியாக (captain) Tசுந்தர்ராவ் அவர்களை நியமித்தனர். இவரும் மிகத்திறமையாக கலவரங்களை அடக்கி ஒடுக்கி அமைதியை நிலை பெறச் செய்தார். 

கலவரங்களின் போது ஆதிதிராவிடர் குடியிருப்புகள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சர். பிட்டி. தியாகராயர் மாதிரி இல்லங்கள் (Model Houses) என்ற ஒரு திட்டத்தை மாநகராட்சியின் திட்டமாகக் கொண்டு வந்தார். இத்திட்டதின்படி சென்னை ஜார்ஜ் டவுனில் ஆசீர்வாத புரத்திலும், வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோட்டிலும், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு போன்ற பகுதிகளிலும் வரிசை வரிசையாக சேரிவாழ் மக்களுக்கு கல் இல்லங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவர் காலத்திற்குப் பிறகு T சுந்தர்ராய் இத்திட்டத்தின்படி எழும்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் மாதிரி இல்லங்களை 1926ல் கட்டிக் கொடுத்து 1927ல் அம்மக்களை குடியேறச் செய்தார். மேலும் கோமளேஸ்வரன் பேட்டையில் அம்மக்கள் வாழும் பகுதியில் அவர்கள் குளிப்பதற்காகப் பொதுக் குளிப்பறை ஒன்றையும், அப்பகுதியில் பூங்கா ஒன்றையும் உருவாக்கினார். வாங்கஸ். தோட்ட சாலையில் மழையில் ஒதுங்கவும், வெயிலில் இளைப்பாறவும் புகலிடம் (SHELTER HOUSE) ஒன்றை கட்டுவித்தார்.

குடிசை வாழ் மக்கள் வீடுகள் கட்டிக் கொள்ளவும் வண்டிகள், மாடுகள் வாங்கிக் கொள்ளவும் சிறு தொழில்கள் செய்து மேன்மையடையவும் கூட்டுறவு நாணய சங்கங்கள் ஆங்காங்கே குடிசைப் பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்டன. 

T. சுந்தர்ராவ் 1921-25 வரை அய்ந்து ஆண்டுகள் கௌரவ கூட்டுறவு நாணய சங்கத்தின் உதவி பதிப்பாளராக விளங்கியதால், 1922ல் பெரம்பூர் பேரக்ஸ் நியூபேரன்ஸ் சாலையில் இளவரசர் வேல்ஸ் சென்னை கூட்டுறவு ஒன்றையும், பிராட்வேயில் பி.ஆர்.எண் தோட்டப் பகுதியில் வில்லிங்டன் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றையும் தோற்றுவித்தார்.

T.சுந்தர்ராவ் அவர்கள் சென்னை சமூக சேவகர் சங்கத்தின் செயலாளராக விளங்கினார். வெள்ளத்தால் குடிசை வாழ் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகும்போது, தன் இல்லத்தையும், உணவு, உடைகளையும் அம்மக்களுக்கு வழங்கியதோடு, அரசாங்கத்திடமிருத்தும் அவற்றைப் பெற்றுத் தந்தார். அவர் 1930ல் புதுப்பேட்டை ஊழியர் சங்கம்  (Pudupet Service League) என்ற ஓர் அமைப்பை தோற்றுவித்து அதன் ஆயுள் கால காப்பாளராக விளங்கினார். இச்சங்கம் இரவு பாடசாலையையும், நூலகத்தையும் நடத்தி வந்ததுடன் கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் இளைஞர்களுக்குத் தக்க பயிற்சியளித்து அவ்வப்போது சென்னை மாநகரிலுள்ள பல்வேறு குழுவினர்களைக் கொண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளையும் வழங்கி வந்தது. 

T. சுந்தர்ராவ் க்ஷத்தரியர், உயர்ந்த வகுப்பினர். 'முத்திரைதானம்' பெற்றவர். முத்திரைதானம் பெற்றவர்கள் மிகவும் 'அய்தீகம்' உடையவர்கள். தம் உறவினர்களைக் கூட தீண்ட மாட்டார்கள். அவர்கள் கையால் கூட உண்ணவும் மாட்டார்கள், மதக் கட்டுப்பாடுகள் அப்படியிருக்க, T. சுந்தர்ராவ் ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்குச் செல்லார். அங்கு 'ராம பஜனை' செய்வார். அம்மக்கள் அன்போடு அளிக்கும் கூழை விரும்பிக் குடிப்பார். அவர்கள் அதை தாம் பயன்படுத்தும் கலயமாகிய மொந்தையில் கொடுத்தாலும் அப்படியே வாங்கிப் பருகுவார். காந்தியைப் போல உயர் குடியினர் பஜனை செய்யும் கோயிலாகிய பிர்லா மாளிகை போன்ற இடங்களில் அவர் தம் ராம பஜனையை செய்திருப்பாரேயானால் அவரை 'மகாத்மா' என்று அழைத்திருப்பார்கள். அவர் அவ்வாறு செய்யாத காரணத்தினால் அவரை காந்தியவாதிகள் "பறநாயுடு" என்று அழைத்து வந்தனர். அவர் அதை தனக்கு கிடைத்த பெரும்பேராகவே எண்ணி புன்னகையோடு பெருமைப்பட்டுக் கொள்ளுவார். அதற்காக அவர் தம் மக்கள் தொண்டினை மாற்றிக் கொள்ளவில்லை.

 சுந்தர்ராவ் அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் செட்யூல்டு சமுதாய மக்கள் தாங்கள் வாழுகின்ற பகுதியான 'நாயடிச்சான் பரச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்ததை சுந்தரபுரம் என்று பெயர் மாற்றி வைத்துக் கொண்டார்கள். அதே போல அவரது தந்தையின் பெயரில் நரியங்காடு என்ற பகுதிக்கு வரதராஜபுரம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். சர். பிட்டி, தியாகராயரது சேவையும் மதித்து அம்மக்கள் திருவொற்றியூரில் தியாகராயபுரம் என்று அவர்கள் வசிக்கும் ஒரு பகுதிக்கு பெயர் வைத்துக் கொண்டார்கள்.

T. சுந்தர்ராவும் தனித்தொகுதி முறையும்

1932 ஆகஸ்டு 17ல் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டானல்டு செட்யூல்டு வகுப்பாரின் தனித்தொகுதிக்குச் சாதகமாக அரசு முடிவு செய்ததாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதை எதிர்த்து காந்தியார் 1932 செப்டம்பர் 20 முதல் தன் இறுதி காலம் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக 1932 செப்டம்பர் 13ல் அறிவித்தார். இதன் காரணமாக  T.சுந்தர்ராவ் 1932 செடம்பர் 18 ஞாயிரன்று சென்னை பெரம்பூர் களவன கண்ணஞ்செட்டியார் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள திறந்த வெளியில் செட்யூல்டு வகுப்பாரின் கூட்டம் ஒன்றை கூட்டினார். மாதவரம், பெரம்பூர். வியாசர்பாடி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி. ரெட்ஹில்ஸ் கொளத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம், சேத்துப்பட்டு, எழும்பூர். புதுப்பேட்டை, ஆயிரம்விளக்கு, மக்கீஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் வாழும் ஆதி திராவிடர், ஆதி ஆத்திரர் ஆகியோர் பெருந்திரளாக வந்து அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தின்போது சுந்தர்ராய் அவர்களுக்கு பெரிதும் உதவியவர் ஜெ. சிவசண்முகபிள்ளை ஆவார். அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சுந்தர்ராவ் "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி அரசு வழங்கியதை காந்தியார் விரும்பலில்லை. அதற்காக அவரது உயிரையும் விடப் போகிறேன் என்கிறார். அவர் இறந்தால் அதற்கு வீண் பழியை உங்கள் மீது சுமத்தப் பார்க்கிறார். அதற்காக நீங்கள் கவலைப் படாதீர்கள். உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தனித் தொகுதி முறை மட்டுமே பலன் அளிக்கும். எக்காரணத்தைக் கொண்டும் அரசு அளித்த தனித் தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டாம்" என்று தெளிவாக எடுத்துரைத்தார். அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்ட திரு. ஜெ. சிவசண்முக பிள்ளை ஒருவர் மட்டுமே தனித்தொகுதி முறைக்கு பதிலாக பிரைமரி தேர்தல் முறையை ஆதரிக்கும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. 

பூனா ஒப்பந்தத்தின் மூலம் தனித்தொகுதி முறை கைவிடப்பட்ட போதிலும் எப்படியாவது செட்யூல்டு வகுப்பாரின் உரிமைகளை காப்பதற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று எண்ணிய, சுந்தர்ராவ் 1933ல் தாழ்த்தப்பட்டோர் ஊழியர் படை(THE DEPRESSED CLASSES SERVICE ARMY) என்ற ஒர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக பொறுப்பேற்றார். செட்யூல்டு வகுப்பாருக்கு தனித்தொகுதி முறையை (SEPERATE ELECTRATE) கிடைக்க செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகத் திகழ்ந்தது. இவ்வமைப்பின் செயலாளர்களாக திரு. J சிவசண்முகபிள்ளை, திரு. பாலகுருசிவம் ஆகியோரை நியமித்தார். இவ்வமைப்பின் துணைத் தலைவர்களாக ரெவரண்ட் ஜான் ரத்தினம், சுவாமி ஜெகஜாநந்தா போன்ற ஆதிதிராவிட தலைவர்கள் விளங்கினார்கள். முதல் மந்திரி பொப்லி அரசரும் செட்டி நாட்டு குமார ராஜா முத்தையா செட்டியாரும் அதன் காப்பாளர்களாக பொறுப்பேற்றனர். சென்னை நகரிலும் சுற்று வட்டாரத்திலும் மொத்தம் 7000 உறுப்பினர்கள் இதில் அங்கம் பெற்றனர். இது சம்பந்தமாக 1934ல் சென்னையில் வரதராஜபுரத்தில் நீதிபதி கிருஷ்ணசாமி நாயுடுவின் பங்களாவில் பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார் அவர்களை வரவழைத்து அவரது மேலான யோசனையைக் கேட்டறிந்தார். 

வரலாறை திரிக்கும் மாபொசி

நீதிக்கட்சி தலைவர் களை கடுமையாக சாடு வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் ம.பொ.சி. உண்மைக்கு மாறான செய்திகளை எழுதி வர லாற்றையே கொண்டிருக்கிறார். உதாரணமாக 1949-ம் ஆண்டு மரணமடைந்த டி. சுந்தர் ராவ் (நாயுடுவை) 1935ம் ஆண்டிலே மரணமடைந்து விட்டதாக தனது 'தமிழகத்தில் பிறமொழியினர்" என்ற நூலில் எழுதியிருக்கிறார்!

- உண்மை இதழ், 16-31.12.1989

தாமரப்பாக்கம் சுந்தர ராவ் நாயுடு (T. Sundara Rao Naidu)(1891-1949)

சுந்தரா ராவ் நாயுடு 1889 ஜனவரியில் திவான் பகதூர் டி.வரதராஜுலு நாயுடு (1863-1930) பத்ம வேலம்மா நாயுடு குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் உள்ள சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட பட்டம் பெற்றார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.

சுந்தர ராவ் நாயுடு 1949இல் எதிர்பாராத விதமாக இறந்தார். சென்னையின் ஆயிரம் விளக்குகளில் உள்ள டி.சுந்தர ராவ் நாயுடு தெரு என்பது இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. சுந்தர் ராவ் பூங்கா என்பது சென்னை மாநகராட்சி பூங்கா ஆகும். இது எழும்பூர் மார்ஷல்ஸ் சாலையில் உள்ளது. இவரது சிலை எழும்பூரில் லாங்ஸ் கார்டன் சாலை மற்றும் பாந்தியன் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக திருத்தப்பட்ட நாள்; 27.01.2026


வியாழன், 25 டிசம்பர், 2025

முத்துலட்சுமி ரெட்டி


இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

 இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகிய (Doctor) முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் ஜூலை 22. இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. உலகளவில் சட்டமன்ற துணைத் தலைவராக வந்த முதல் பெண்மணியும் இவரே.

பெண்கள் அந்தக் காலத்தில் அதுவும் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால், அது சாதாரணமான ஒன்று அன்று. புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் தன்னந்தனியான பெண்ணாகப் படித்துத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

அம்மையார் -ஏடு ஒன்றினை நடத்தினார். அதன் பெயர் “ஸ்த்ரி தர்மா’’ என்பதாகும். பெண்கள் பிரச்சினை, சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்தார். அரசின் நல்ல திட்டங்களை ஆதரித்தும், கேடு பயப்பவைகளை எதிர்த்தும் கட்டுரைகளைத் தீட்டினார்.

நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அம்மையார் ஒருமனதாக சென்னை மாநில மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அதன் துணைத் தலைவராகவும் ஒளி வீசினார். தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயது உயர்த்தும் சட்டம் இவற்றிற்காகப் பெரும் குரல் கொடுத்தார். குறிப்பாக தேவதாசி ஒழிப்புச் சட்டம் (பெண்களுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு விடுவதை ஒழித்த சட்டம்) அம்மையாரை என்றென்றும் நினைவு கூரச் செய்வதாகும்.

இந்தச் சட்டத்தை அம்மையார் கொண்டு வந்தபோது, இது தெய்வ காரியத்தில் தலையிடுவதாகும் _ இந்த ஜென்மத்தில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சத்தியமூர்த்தி அய்யர் வாய் நீளமாகப் பேசினார். ‘அப்படியா? இதுவரை எங்கள் ஜாதியினர் மோட்சம் அடைந்தது போதும்; வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஜென்மத்தில்  தேவதாசிகளாக இருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடையட்டுமே!’ என்று போட்டாரே ஒரு வெடிகுண்டு. சத்தியமூர்த்தி அய்யர்கள் சப்தநாடியும் அடங்கிப் போனார்கள்.l


பனகல் ராஜா

 


சமூக நீதிக்கான பலமான அடித்தளம் அமைத்த
பனகல் ராஜா தலைமையிலான அமைச்சரவை : 19.11.1923

பனகல் அரசரின் ஆட்சிக் காலம், இந்தியாவிலேயே முதன் முறையாக சமூக நீதிக்கான பல முன்னோடிச் சட்டங்களைக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டப்படுகிறது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

அரசுப் பணிகளில் பார்ப் பனரல்லாதோர், பார்ப்பனர், இஸ்லாமியர், கிறிஸ்துவர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய அரசாணையை (ஆகஸ்ட் 1921) நிறைவேற்றியது. இது முதன் முறையாக சென்னை மாகாணத் தில் அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த முதல் சட்டம் ஆகும்.

‘ஆதி திராவிடர்’ – பெயர் மாற்றம்

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத் தும் ‘பஞ்சமர்’ போன்ற சொற்களுக்குப் பதிலாக “ஆதி திராவிடர்” என்ற சொல்லை அரசாங்க ஆவணங்களில் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

பஞ்சமி நிலம்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவைவிட, பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் ஆதித்திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு பல மடங்கு அதிகமாக இருந்தது.

 நிர்வாகம் – சமூகச் சீர்திருத்தங்கள்

இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் (1925): இந்து கோயில்கள் மற்றும் மடங்களின் நிதிகள், நிர்வாகம் ஆகியவற்றில் இருந்த முறைகேடுகளைக் களைவதற்காகவும், கோயில் நிதியை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தவும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இச்சட்டத்தை நிறை வேற்றினார்.

 பெண்களுக்கான வாக்குரிமை (1921)

நீதிக்கட்சி அரசு பெண்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உரிமை அளிக்கும் சட்டத்தை (1921) இயற்றியது. இது இந்தியாவின் பிற மாகாணங்களுக்கு முன்னதாகச் செய்யப் பட்டது.

கல்வியில்….

மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப் பட்டது. இந்திய மருத்துவ முறைகளை வளர்க்கவும், முறைப்படுத்தவும் இந்திய மருத்துவப் பள்ளியை (இன்றைய கிண்டி மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி) நிறுவினார்.

ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.

 நகரத் திட்டமிடல்

சென்னை நகரத் திட்டமிடல் சட்டம், 1920 நிறைவேற்றப்பட்டு, தியாகராயர் நகர்  போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்க வழிவகுத்தது.

 

செவ்வாய், 4 நவம்பர், 2025

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்

 

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் வாழ்க்கைக் குறிப்புகள்




1920 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள்.

வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ். எஸ். எல். சி.,) வரை படித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கை யில் கல்வி தடைப்பட்டுவிட்டது.

1943 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியது.

1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள்  தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்து களால் கவரப்பட்டு அய்யாவின் தொண்ட ராகப் பணியாற்ற வந்தவர்.

1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி 'திராவிடர் கழக' மாக மாறிய மாநாட்டில் (27-8-1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி கே. அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறி முகம் செய்து வைக்கப்பட்டார்.

1948 டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப்போரில் அரசு தடையை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டு, பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்,

1949 பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணி யம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.

மார்ச் மாதம் 31-ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

ஜூலை மாதம் 9-ஆம் நாள் பெரியார்-மணியம்மையார் பதிவுத் திருமணம், திருமண ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு கே.ஏ.மணியம்மை (கே. அரசியல் மணி) என்று இருந்து வந்த பெயரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று தமிழிலும் E.V.R.மணியம்மை என்று ஆங்கிலத் திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

1952 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

1958 மார்ச் மாதம் 8-ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தரச் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அந்த நேரத்தில் மணியம்மையார், முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல் களைத் திரும்பப் பெற்றார். மணியம் மையார் தலைமையில் சவ ஊர்வலம் நடந்தது.

19-1-1958 'விடுதலை'யில் வெளியான "இளந் தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும் வெளியிடுபவருமான ஈ.வெ.ரா. மணியம் மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது. மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1957-58 தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம் சோர் வடையாமலும், கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும் அன்னை மணியம் மையாருக்குத் திருச்சியில் நடைபெற்ற - திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு கூட்டத்தில் (19-7-1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

1973 டிசம்பர் 24-ஆம் நாள் 'பகுத்தறிவு பகலவன்' தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்றபின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப் பேற்றுக் கழகத்தை வழி நடத்திச் சென்றார்.

1974 திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, கழகத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது.

3-4-1974 அன்று அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26-5-1974 அன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக்கொடி காட்டினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது அன்னை மணியம்மையார் அவர்கள் 23-9-1974 அன்று பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் தொடங்கப்படஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24-9-1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு அன்னை மணியம் மையார் தலைவராகவும், கி.வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள்.

1974 டிசம்பர் 25-ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் 'இராவண லீலா' என்னும் இன உணர்வு வரலாற்றைப் படைத்துக் காட்டினார்.

சென்னை பெரியார் நூலகம் - ஆய்வகத்தை  நிறுவினார். பெரியார் மணி யம்மை பெண்கள் உயர் நிலைப் பள்ளி' யைத் திருச்சியில் ஏற்படுத்தினார்.

1975 ஏப்ரல் 26-இல் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்து கொண்டு பெண்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை அண்ணாசாலையில் 21-9-1975 அன்று கலைஞர் சிலையை அமைத்தார்.

1975 செப்டம்பர் 9-ஆம் நாள் 'இராவண லீலா'. வழக்கில் மணியம்மை மற்றும் தோழர் களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங் கப்பட்டது. வழக்கை எதிர்த்து மேல்முறை யீடு செய்யப்பட்டது..

'மிசா' காலத்தில் 16-9-1976 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப் பட்டார்.

1977 ஏப்ரல் 25-ஆம் நாள் 'இராவண லீலா' வழக்கில் மணியம்மையாரும் மற்றத் தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலை யிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

பெரியார்திடல் முகப்பில் 'பெரியார் பில்டிங்ஸ்' என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

1978 மார்ச் மாதம் 16-ஆம் நாள் மார டைப்பு ஏற்பட்டு சென்னை பொதுமருத்துவ மனையில் காலமானார்.

இன்று வரலாறாய் ஒளிர்கிறார்.

- விடுதலை ஞாயிறு மலர், 9 .3 .19


“ராவணலீலா”

25.12.1974 அன்று சென்னை பெரியார் திடலில், “ராவணலீலா” நடைபெற்றது. இராவணனாக அணைக்கரை டேப்தங்கராசு வேடமிட்டு நடித்தார். இரவு 7 மணிக்கு ராமன், சீதை, லட்சுமணன் உருவப் பொம்மைகளுக்கு அன்னை மணியம்மையார் தீ வைத்தார். இந்நிகழ்வு இந்தியாவையே உலுக்கியது. அம்மையார் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு, மறுநாள் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டனர். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. எழும்பூர் 5ஆவது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், தண்டனை விதித்தது. இதை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் 25.4.1977 அன்று தீர்ப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்தார். டில்லியில் நடக்கும் “இராமலீலாவிற்கு” எதிர்வினைதான் இந்த “இராவணலீலா”. இந்த நிகழ்விற்கு மக்களிடம் எதிர்ப்பு இல்லை. இந்நிகழ்வால் கலவரம் எதுவும் நிகழவில்லை. இது மதத்திற்கு எதிரான விழா அல்ல என்று தமது தீர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாய் வழங்கியிருந்தார்.

எழும்பூரில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலையை கி.வீரமணி திறந்து வைத்தார்

எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள வேனல்ஸ் சாலைக்கு ‘அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்த நிலையில் கி.வீரமணி பெயர் பலகையை திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள வேனல்ஸ் சாலையை ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை‘ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த சாலைக்கு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்ச்சி 7.5.22ஆம் நாள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சிகமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை‘ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் அமைச்சர்களுக்கும், மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்


திங்கள், 4 ஆகஸ்ட், 2025

தந்தை பெரியார்

 

பெரியார்



தந்தை பெரியார் என்ற பட்டப்பெயரின் ஏனைய பயன்பாடுகளுக்கு தந்தை பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்) பக்கத்தைப் பாருங்கள்.

ஈரோடு வெங்கட்டர் இராமசாமி
தபால் தலையில் பெரியார் ஈ.வெ.ரா. படம்
பிறப்பு17 செப்டம்பர் 1879
ஈரோடு, சென்னை மாகாணம், இந்தியா இந்தியா
இறப்பு24 திசம்பர் 1973 (அகவை 94)
வேலூர், தமிழ்நாடு
நினைவகங்கள்பெரியார் - அண்ணா நினைவு இல்லம்(ஈரோடு), தந்தை பெரியார் நினைவகம் (சென்னை,வைக்கம்)
மற்ற பெயர்கள்


விருது


பட்டம்
ஈ.வெ.ரா., பெரியார்,.தந்தை பெரியார்

யுனெஸ்கோ (27.06.1970 )
கல்வி ஆண்டு

பெரியார்  (13.11.1938 ,
தமிழ் நாட்டு பெண்கள் மாநாடு)
பணிசெயற்பாட்டாளர், அரசியலாளர்,
சீர்திருத்தாளர்
புரட்சியாளர்
பகுத்தறிவூட்டல்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
நீதிக்கட்சி
திராவிடர் கழகம்
அரசியல் இயக்கம்சுயமரியாதை இயக்கம்,
திராவிடர் கழகம்,
திராவிட தேசியம்,
தமிழ் தேசியம்
சமயம்இறைமறுப்பாளர்
பகுத்தறிவாளர்
வாழ்க்கைத்
துணை
நாகம்மை (இ. 1933), மணியம்மையார் (1948–1973)

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழ்நாட்டின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பன சனாதன தர்மம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தமிழ்நாடு அரசு இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாக(செப்17) அறிவித்தது.

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் இந்திய நாடு முழுக்க சமூகப் பரப்பிலும், அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இருந்தாலும் திராவிட நாட்டு பகுதியிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் பங்கு தாக்கங்களை ஏற்படுத்தியவை..இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் பெரியார், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.

                           ஈ.வெ. இராமசாமி என்ற தந்தை பெரியார் பிறந்த இல்லம்


வாழ்க்கை

பெயர்க்காரணம்

குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது. 

'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ. வெ. இராமசாமிப் பெரியார்' என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளையே ஆவார் .

நவம்பர் 13- 1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றி வந்த சமுதாயப் புரட்சிப் பணிகளால் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் போற்றி அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர் 'பெரியார்' என அழைக்கப்பட வேண்டுமென்று  மாநில பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்களால் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இளமைக் காலம்

ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் , செப்டம்பர் 17,1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் கன்னட மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருட்டிணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர் ஆவர்.

இளமைக் காலத் தோற்றம்

   1929 இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் முகமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும்  சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான  தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி   கன்னடம் ஆகும். பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு (பத்து வயது) வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும், இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.

குடும்பம்

இராமசாமியின் 19ஆவது வயதில் அவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மை தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு ஆண்டுகளில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை அய்ந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

தனது அண்ணன் மகன் ஈ. வெ. கி. சம்பத்தை திராவிடர் கழகத்தின் எதிர்காலத் தலைவராக நியமிப்பதாக இருந்தார். ஆனால் சம்பத் அண்ணாதுரையின் சீடராக விளங்கியதால், பெரியார் தமது 70-ஆவது வயதில் 32 வயதுடைய காந்திமதி எனும் மணியம்மையை மணந்தார். இத்திருமணத்தால் திராவிடர் கழகத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்ணாதுரை போன்ற தலைவர்கள் இராமசாமியை விட்டுப் பிரிந்தனர். ஈ. வெ. இராமசாமி, மணியம்மையை தனது சொத்துக்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் பாதுகாவலராக நியமித்தார்.

காசிப் பயணம்

1904இல் இராமசாமி, இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பார்ப்பனர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.

இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பார்ப்பனரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு  பார்ப்பனரல்லாதார்  என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பார்ப்பனர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பார்ப்பனர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பார்ப்பனர் யாரும் இந்து சாத்திரத்தின்படி, இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.

பசிதாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிக்கொண்டார். பார்ப்பனரல்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு உணவு வழங்கப் பார்ப்பனர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றத்தாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின், தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார்.

அரசியல் வாழ்வு

காங்கிரசு கட்சியின் உறுப்பினர்

(1919–1925)

இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்துப் பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், தனக்கு உரிமையான தோப்பில் உள்ள 'கள்' தரக்கூடிய 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 (நவம்பர்)இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி ஒரு மாதம் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரான கண்ணம்மாளும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.

1922 இல் இராமசாமி சென்னை இராசதானியின் (மதராசு இராசதானி) காங்கிரசு கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரசு கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரசு கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார்.

வைக்கம் போராட்டம்

(1924–1925)

முதன்மைக் கட்டுரை: வைக்கம் போராட்டம்

கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் (சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி. கே. மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும், அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னி பெசண்டின் உதவியையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தை நடத்த அனுமதிக்காத காந்தியின் செயலையும் மீறி, அவரின் வழியான  (சத்தியாகிரக) அறப்போராட்டமாக முன்னெடுத்தார்.

நாடெங்கிலும் இருந்து காங்கிரசு தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரசு தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ. பி. கேசவமேனன், இ. எம். எசு., ஏ. கே. கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள்.19 பேர் சிறை பிடிக்கப்பட்டவுடன் போராட்டம் தொய்வுற்றது. சிறையிலிருந்தவாரே மற்றவர்கள் மூலம் தமிழ் மாநில காங்கிரசு தலைவராகவிருந்த இராமசாமிக்கு, 'உடனே புறப்பட்டு வந்து தலைமையேற்று போராட்டத்தை நடத்துமாறுய மூன்று முறை தந்திகளை அனுப்பினர். தமிழ்நாட்டில் இருந்து ஈ. வெ. ரா, கோவை அய்யாமுத்து, எம். வி. நாயுடு ஆகியோர் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ. வெ. ரா முக்கியமான பங்கு வகித்து இரண்டு முறை சிறை சென்றார். ஈ. வெ. ரா அந்தப்போரில் பங்கெடுத்து இறுதிவரை போராடினார்.(!924-1925)

ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச்(அருவிக்குத்து) சிறையில் அடைக்கப்பட்டனர்.மீண்டும் போராட்டம் செய்ததால் இரண்டாவது முறையாக 22.05.1924இல் கைது செய்யப்பட்டு 'பசுப்புரா'  சிறையில் அடைக்கப்பட்டார். மொத்தம் 74 நாள் சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டத்திற்காக ஈ. வெ. ரா  ஏழு முறை கேரளா சென்றுள்ளார்.காந்தியின் அறிவுறுத்தலின்படி, இப்போராட்டத்தில் கேரளாவைச் சாராதவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் பஞ்சாப்பிலிருந்து வந்து சீக்கியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நாகம்மாள் 

கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தார். கடைசியில் போராட்டம் வெற்றி ஈட்டியது. அரசர் இறந்ததால் இராணியார் ஏற்பாடு செய்த அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாசு காந்தியும் போராட்டக்குழு சார்பில் இராசாசியும் கையெழுத்திட்டனர்.

இராணியார் அனைத்து சாதியினறும் வைக்கம் கோவில் தெருக்களில் செல்ல அனுமதித்து ஆணை வெளியிட்டார்.

 இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். (வைக்கம் வீரர் என முதன் முதலாக தி.ரு.வி.க.கூறினார்)பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது.

பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆலயப்பிரவேச இயக்கமாகக் தந்தை பெரியாரால் கொண்டு செல்லப்பட்டது.   'மகத் குளத்தில் நீர் அருந்தும் போராட்டத்'திற்கு 'இராமசாமியின் வைக்கம் போராட்டமே உந்து சக்தியாக இருந்த்து' என டாக்டர் அம்பேத்கர் கூறினார்..

சுயமரியாதை இயக்கம்

முதன்மைக் கட்டுரை: சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலத்தின் பொழுது இராமசாமி

இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பார்ப்பனரல்லாதோர், தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.

  • சுயமரியாதையாளர்கள் பார்ப்பனப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.
  • ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.
  • சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
  • அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுப்பாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது.
  • கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.
  • இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராசு அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928லேயே வலியுறுத்தியது.
  • பகுத்தறிவு சமத்துவ (ஏற்றத் தாழ்வற்ற) சமுதாயம் அமைய வலியுறுத்தினர்..

இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாக இராமசாமி 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் தொடக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எசு.குருசாமி மேற்பார்வையில் மதராசு இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராசு இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி செய்தது.

செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாடு

25.08.1929 - குடிஅரசிலிருந்து... சுயமரியாதை இயக்கத்தின் சமய சமுக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்குச் செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மா னங்களே போதிய அத்தாட்சியாகும். 

1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்ன வென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் ஜாதிபேதம் கிடையாது என்பது.

2. ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம் புராணம் முதலியவைகளை பின்பற்றக் கூடாது என்பது.

3. வர்ணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர் வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது. 4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொது குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொதுஜனங் களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டுமென்பது.

5. இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

6. ஜாதி, மத வித்யாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்களை கேட்டுக் கொள்கிறது என்பது.

7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும். மனைவிக்கும் புருஷனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்துகொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்துகொள்ளலாம். ஆண், பெண் தாங்களே ஒருவரைஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.

8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும் அதிக செலவில்லாமலும் ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும் ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.

9. கோயில் பூஜை விஷயத்தில் கோவில் களின் சாமிக்கென்றும் பூஜைக்கென்றும் வீணாகக் காசை செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.

புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத் திற்கும் வேதம் படிப்பதற் கென்றும் விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களைக் கல்வி ஆராய்ச்சி கைத்தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய் யும்படி கேட்டுக் கொள்ளுவது.

உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத் தையும் நேரத்தையும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளா தார உணர்ச்சி ஆகியவை களுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.

10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோதமான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களைப் பகிஷ்கரிப்பது என்பது.

11. பெண் உரிமை விஷயத்தில்; பெண் களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும் படி பார்ப்பது என்பது.

12. தீண்டப்படாதார் விஷயத்தில், தீண்டப் படாதார்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப் பது என்பது.

13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்குக் கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும் தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.

14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தைச் செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியைச் செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.

15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.

இத்தீர்மானங்களே உலகை திருப்பிப்போட்ட தீர்மானங்களாகும்.

6ஆவது தீர்மானத்தின் படி அனைவரும் உடனே பெயருக்கு பின் ஒட்டாகவிருந்த ஜாதி பெயர்களை துறப்பதாக அறிவித்தனர்.

மத மறுப்பு, இறை மறுப்பு -  1931

1931 ஆகஸ்ட்டு விருது நகர் சுயமரியாதை இயக்க மாநாட்டு தீர்மானங்களுக்கு பின் மத மறுப்பு, இறை மறுப்பு கொள்கைகளை சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்தது.[1]

வெளிநாடு சுற்றுப்பயணம்

(1929–1932)

1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங்மலாக்காகோலாலம்பூர்கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எசு.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம்மேற்கொண்டார். எகிப்துகிரீசுதுருக்கிஉருசியாசெருமனிஇங்கிலாந்து, சுபெயின், பிரான்சு, மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியா திரும்பினார்.

இச்சுற்றுப்பயணங்கள் இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. உருசியாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடைய கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் இராமசாமியின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை.  இராமசாமி திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம். சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இராமசாமியின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழ்நாட்டில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.

இந்தி எதிர்ப்பு

முதன்மைக் கட்டுரை: இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1937 இல்  இராசகோபாலாச்சாரியார் மதராசு மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில், இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராசாசி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ரியர்கள்திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்கத் திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார். இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாகப் பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன.

இந்தி எதிர்ப்பு தமிழர் பெரும்படை 

இந்தி எதிர்ப்பு தமிழர் பெரும்படை 1-8-1938 அன்று திருச்சியில் புறப்பட்டு 11-9-1938 அன்று சென்னையை அடைந்தது.  தமிழர் பெரும்படைக்கு சென்னை கடற்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி குடிஅரசு 18-9-1938.


நீதிக்கட்சித் தலைவராக

(1938–1944)

முதன்மைக் கட்டுரை: நீதிக்கட்சி

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு தொடங்ககப்பட்டது. பார்ப்பனர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் தொடக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பார்ப்பனர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பார்ப்பனரல்லாதாரை ஒடுக்க, பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.

1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராசு மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது.

 நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939, இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார்  விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார்( 29.12.1938). அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் சிலர் தந்தை பெரியாரின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.

திராவிடர் கழகம்

(1944-முதல்)

முதன்மைக் கட்டுரை: திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் உருவாதல்

1944 இல் நீதிக்கட்சித் தலைவராக தந்தை பெரியார்  முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என தந்தை பெரியாரால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் தந்தை பெரியார் நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பொ. தி. இராசன், தலைமையில் தொடங்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது.

திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய்மொழித் தாக்குதல்களைத் தொடுக்கலாயினர். 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும், இறைமறுப்பாளர்களாகவும்,பகுத்தறிவாளர்களாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள்  இவற்றில் தனிக்கவனம் செலுத்தினர்.

திருவள்ளுவர் குறள் மாநாடு -1949

திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது சென்னை இராயபுரத்தில் 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் நாள்களில் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டுக்கான அழைப்பில், பெரியார் பின்வருமாறு கூறுகிறார்: "குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்."

குழந்தைகள் காப்பகம்

1961 ஆம் ஆண்டு முதல் அரசு நிதி உதவியுடன் நாகம்மையார் அனாதைப் ( இல்லம் அனாதை என்ற பெயரோடு செயல்பட வேண்டுமென்பது அரசு விதிமுறையாகும்) பெண்கள் இல்லமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற அனாதை இல்லங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகள், பள்ளி வயது என்று சொல்லப்படும் 6 வயது முதல் 18 வயதிற்குள் இருந்தது. பள்ளியில் சேர்ந்து படித்தால் மட்டுமே அரசு நிதி உதவி வழங்கப்படும் என்பது நிதியுதவி விதி முறைகளில் உள்ள நிபந்தனையாகும்.

6 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளை இவ்வில்லத்தில் சேர்த்து வளர்க்க அரசு விதிமுறைகளில் இடமில்லை. இத்தகைய குழந்தைகளைப் பராமரிக்க பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம் எனத் தனியாக உருவாக்கப்பட்டு,(09.08.1967இல் அடிக்கல் நாட்டப்பட்டது.) 6 வயதிற்கும் குறைவான குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். தாய், தந்தையற்ற இக்குழந்தைகளுக்கெல்லாம் பெயருக்கு முன்னால் ஈ.வெ.ரா.ம (ஈ.வெ.ராமசாமி மணியம்மை) என்ற முதல் எழுத்துகள் சேர்க்கப்பட்டு பதிவேடுகளில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன.

அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு

முதன்மைக் கட்டுரை: திராவிட முன்னேற்றக் கழகம்

1949 இல் தந்தை பெரியாரின் தலைமைத் தளபதியான காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை 17 செப்டம்பர் 1949 அன்று சென்னையில் தொடக்கினார். இந்தப் பிரிவுக்கு தந்தை பெரியார் மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. தந்தை பெரியார் திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். தந்தை பெரியார்  தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் தந்தை பெரியார்  தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், சூலை 9, 1948 அன்று தந்தை பெரியார் , தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர்.

அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால், அண்ணாதுரையின் திமுக கட்சியை, கண்ணீர்த்துளி கட்சி என அதுமுதல் தந்தை பெரியார்  வர்ணிக்கலானார். அதன் பின், பெரியாருக்காக திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது என அண்ணாதுரை அறிவித்தார். அண்ணாதுரை தமிழ் நாட்டு முதல்வரானவுடன் நேராக புறப்பட்டு சென்று திருச்சியிலிருந்த.தந்தை பெரியாரை சந்தித்து வருத்தம் தெரிவித்ததுடன் 'இந்த ஆட்சி தந்தை பெரியாருக்கு காணிக்கை' என்று கூறினார். அண்ணாதுரை மறைவின் பின் திமுக தலைவராக தந்தை பெரியாரின் வாழ்த்துதலுடன் மு.கருணாநிதி பொறுப்பு ஏற்றார்.

1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு

தந்தை பெரியார் 1957 தேர்தலில் காங்கிரசை முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களைப் பிடித்தது.

இறுதிக் காலம்

1953 மே 27இல் புத்தர் விழா கொண்டாடப்பட்டு, அன்று மாலை தமிழ் நாடெங்கும் பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

1956 ஆகஸ்ட்டு 01இல் சென்னைமெரினாவில் வைணவ இந்துக் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய தந்தை பெரியாருக்குத் தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன்னால், கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தந்தை பெரியார் அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்திய அரசியல் சட்டம் எரிப்பு

26.11.1957 செவ்வாய்க்கிழமை, ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி, தந்தை பெரியாரின் அறிவிப்பின்படி   தமிழ்நாடு முழுவதும் இந்திய அரசியல் சட்டம் எரிக்கப்பட்டது. திருச்சியில் மட்டுமே 3000க்கும் மேற்பட்டோர் சட்டத்தை எரித்தனர்!   தந்தை பெரியாரை முன்கூட்டியே 25.11.1957ஆம் நாள் அரசு திருச்சியில் கைது செய்தது.

மயிலாடுதுறை வட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்ற தோழர்களுடன் தந்தை பெரியார்

1958 இல் தந்தை பெரியார் மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் தந்தை பெரியார் ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார்.

1962 இல் தந்தை பெரியார் தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் வட இந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

யுனெஸ்கோ விருது

 தந்தை பெரியாரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி 1970 சூன் 27 அன்று யுனெஸ்கோ மன்றம்' என்ற யுனெஸ்கோவின் அனுமதி பெற்ற இந்திய அமைப்பு,

புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்கிரடிசு; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி'

Periyar - The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions, 
meaningless customs and base manners”.
- UNESCO (27.06.1970)

என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

யுனெஸ்கோ விருது பட்டயம்UNESCO (27.06.1970)

இவ்விருது 27.06.1970 அன்று சென்னை இராஜாஜி அரங்கில், ஒன்றிய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. 
யுனெஸ்கோ விருது குறித்து 28.06.1970 'விடுதலை நாளேடு' செய்தி

பெரியார் பட்டம்

சென்னையில் ஆணைகவுனி அருகில் உள்ள ஒற்றைவாடை தெவிலுள்ள ஶ்ரீ லெட்சுமி விலாச நாடகச்சபை[2] அரங்கத்தில் நவம்பர் 13- 1938 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றி வந்த சமுதாயப் புரட்சிப் பணிகளால் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் போற்றி அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவர் 'பெரியார்' என அழைக்கப்பட வேண்டுமென்று  மாநில பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றவர்களால் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதழ்கள், ஏடுகள் மற்றும் நாளிதழ்கள்

ஈ.வெ.ராமசாமி தன்னுடைய கருத்துகளைப் பரப்புவதற்காகப் பின்வரும் இதழ்களை வெளியிட்டு வந்தார்:

  1. குடிஅரசு (வார இதழ்) 1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது.
  2. ரிவோல்ட் (Revolt) (ஆங்கில வார இதழ்) 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது. முதல் இதழை கோவை இரத்தினசபாபதியார் தலைமையில் பட்டிவீரன்பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் 6-11-1928ஆம் நாள் வெளியிட்டார். இதழுக்கு ஈ.வெ.இராவும் எசு. இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர்; நாகம்மையார் வெளியீட்டாளர்.
  3. ஜஸ்டிசைடு (Justicite).
  4. புரட்சி (வார இதழ்) 1933 நவம்பர் 20 ஆம் நாள்தொடங்கப்பட்டது. 17.6.1934ஆம் நாள் இறுதி இதழ் வெளிவந்தது.
  5. பகுத்தறிவு (நாளிதழ்).1934 ஏப்ரல் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டு 1934 மே 27ஆம் நாளோடு நிறுத்தப்பட்டது
  6. பகுத்தறிவு (வார இதழ்) 1934, ஆகஸ்ட்டு 26 ஆம் நாள் முதல் 1935 சனவரி 1ஆம் நாள் வரை 20 இதழ்கள் வெளிவந்தன.
  7. பகுத்தறிவு (மாத இதழ்) 1935, மே 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது 1939 சனவரி வரை வெளிவந்தது.
  8. விடுதலை (வாரம் இருமுறை) 1935, சூன் 01ஆம் நாள் தொடங்கப்பட்டது.
  9. விடுதலை (நாளிதழ்) 1937, சூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது
  10. உண்மை (மாத இதழ்)
  11. தி மார்டர்ன் இரேசனலிசிட்டு (The Modern Rationalist) (ஆங்கில மாத இதழ்) 1971 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு நூல்

1. 'தமிழர் தலைவர்' என்கின்ற தலைப்பில் சாமி.சிதம்பரனார் என்பவரால் தொகுத்து எழுதப்பட்டு தந்தை பெரியாரால் மெய்ப்பு பார்க்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
2. சாகித்ய அகாதெமி சார்பில் 2006ஆம் ஆண்டு 'இந்திய இலக்கிய சிற்பிகள்' வரிசையில் 'பெரியார் ஈ.வெ.ரா' என்கின்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது.(2006)

3.

நெ.து.சுந்தரவடிவேலு

 அவர்களின்

 'புரட்சியாளர் பெரியார்

' என்கின்ற நூலை (1979) தமிழ் நாடு அரசின் 

தமிழ் வளர்ச்சித் துறை

 சார்பில் 2014 ஆம் ஆண்டு 

மறுபதிப்பு

 செய்து வெளியிடப்பட்டது.

4.புதுதில்லியிலிருந்து இயங்கும் 'நேஷ்னல் புக் டிரஸ்ட்' என்கின்ற நிறுவனம் சார்பில் 'விடுதலை பொன்விழா வரிசை' என்கின்ற வரிசையில் 'தந்தை பெரியார் வாழ்வும் தொண்டும்'என்கின்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது.(1997)
பெரியார் சிலை, வைக்கம்

தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற பெரியார், வேலூர் சி. எம். சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பெரியார், சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

விமர்சனங்கள்

  • தந்தை பெரியார் மத மூடநம்பிக்கைகளையும், பார்ப்பன தத்துவங்களையும், இந்து மத இதிகாசம் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எதிர்த்தார். பிற மதங்களைப் பற்றி அவர் விமர்சித்துள்ளார்.
  • பாரதியாரை, கிறுக்கன் பாரதி என்று குறிப்பிடுகின்றார்.
  • பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசம்" என்றும் தந்தை பெரியார்  சிலப்பதிகாரத்தை விமர்சித்தார்.
  • தமிழ் மொழியை "காட்டுமிராண்டி பாசை" என்றார். தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சி இல்லை எனவும் பழந்தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் நிறைந்து இருப்பதாகவும் அதற்குக் காரணம் சொன்னார்.

நினைவகங்கள்

தமிழ்நாடு அரசு (முதல்வர் கலைஞர்)தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் உட்கார்ந்த நிலையில் சிறிய அளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.இந்த இடம் அன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களால் நினைவகம் அமைக்க வழங்கப்பட்டது.

பெரியார் - அண்ணா நினைவு இல்லம் - ஈரோடு


வைக்கம்

கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தமிழ்நாடு அரசால் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.

  தந்தை பெரியார் நினைவகம் 

நினைவிடம் - சென்னை

சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழகத்தின் தலைமை இடமான பெரியார் திடல் எனப்படும் பெரியார் மய்யத்தில் 'பெரியார் அருங்காட்சியகம்' ஆய்வு நூலகமும் எணினி நூலகமும் உள்ளது.  1500.பேர் உட்காரக்கூடிய 'எம்.ஆர்.ராதா மன்றம்' என்கின்ற அரங்கம் உள்ளது. ஒரு பகுதியில் 'தந்தை பெரியாரின் நினைவிடம்' உள்ளது.

தந்தை பெரியாரின் நினைவிடம்'

சென்னை பெரியார் மய்யம்



உருவச் சிலை

தந்தை பெரியாரின் நினைவிடத்தின் நுழைவு வாயிலில் 21 அடி உயர தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது.

நூற்றாண்டு விழா

தமிழ் நாடு அரசு (முதல்வர் எம.ஜி.ஆர்.) சார்பிலும் திராவிடர் கழகம் சார்பிலும் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா (1979) நாடு முழுக்க கொண்டாடப்பட்டது.

பெரியார் மேளா

உத்திரபிரதேச மாநில தலை நகர் 'இலக்னோ' வில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 16,17,18 ஆகிய மூன்று நாள்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா 'பெரியார் மேளா' என்கின்ற பெயரில் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் ஏற்பாட்டில், அன்றைய முதல்வர் மாயாவதி அவர்கள் நடத்தினார்கள். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி ( தற்போது தலைவர்) அவர்கள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியா முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள்  தனி தொடர்வண்டி மூலமும் அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி தோழர்கள் தனி தொடர்வண்டி மூலமும் வந்து பங்கேற்றனர்.


பெரியார் நினைவு சமத்துவ புரம்

1997 முதல் தமிழ்நாடு அரசு(முதல்வர் கலைஞர்) சார்பில் பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் அமைக்கப்பட்டன.முதல் சமத்துவபுரத்தை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை.யில் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17- ஆம் நாள் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். 2011ஆம் ஆண்டு வரை 238 பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கலைஞர் கருணாநிதி ஏற்படுத்தினார்.

பல்கலைக்கழகம் 

1.பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMUதஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லத்தில் 219 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது. பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியது. இதன் வேந்தராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளார்.

2.பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University) என்பது சேலத்தில் அமைந்துள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கு தந்தை பெரியார் பெயரிடப்பட்டது. பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய அவையின் தரத்தினைப் பெற்றது.

தந்தை பெரியார் வழங்கிய நிதி மற்றும் இடத்தில் கல்லூரி


24.08.1965இல் திருச்சிராப்பள்ளியில் காஜாமலை என்கின்ற இடத்தில் தந்தை பெரியாரால் கல்வி வளர்ச்சிக்காக(கல்லூரி கட்ட) 5.5 இலட்ச ரூபாயும், 20 ஏக்கர் நிலமும் அரசுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு கட்டப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு பக்தவச்சலம் அவர்கள் திறந்துவைத்தார். 2024 ஆண்டு திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி பெரியார் மய்யம்

1. பாம்நோலி

புதுடெல்லியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாம்நோலி என்கின்ற இடத்தில் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5மாடி கட்டிடம் 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை' (திராவிடர் கழகம்)யால் கட்டப்பட்டு 'பாம்நோலி' 'பெரியார் மய்யம்'  கல்வெட்டு அன்றைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சத் அவர்களாலும், பெரியார் மய்ய வளாகம், உலக மனிதநேய அமைப்பின் தலைவர் லெவிஃபிராகல் அவர்களாலும் 01.10.2000 இல் திறந்துவைக்கப்பட்டது. இவ் விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து  தனி இரயில் மூலம்  1000த்திற்கு மேற்பட்டோர் புறப்பட்டு வந்தனர். இதில் கல்வி நிலையமும், மருத்துவ மனையும், நூலகமும், பெரியார் மியூசியமும் செயல்படுகிறது.

மீண்டும் பாம்நோலி பெரியார் மய்யம்

இந்த 'பாம்நோலி' 'பெரியார் மய்யம்' 03.12.2000 இல் நியாய விரோத - சட்ட விரோதமாகவும், அரசியல் உள்நோக்கத்துடன், நீதி மன்ற தடையாணையையும் மீறி அரசால் இடித்து தள்ளப்பட்டது. சட்டப் போராட்டங்களுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் பெரியார் மய்யம் கட்டப்பட்டு செயல்பட்டுவருகிறது.

2. ஜசோலா

நீதி மன்ற ஆணையையும் மீறி வலுக்கட்டாயமாக ஒன்றிய அரசின் கட்டளையால், 'பாம்நோலி' பெரியார் மய்யம்' இடிக்கப் பட்டதற்கு நீதி கேட்டு போராடியதின் விளைவாக புதுடெல்லியில் 'ஜஸோலா' என்கின்ற இடத்தில் ஒரு ஏக்கர் அளவில் அரசால் நிலம் வழங்கப்பட்டது.  

அந்த இடத்தில் ஏறக்குறைய 64,000 அடி சதுர பரப்பில், 10கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5மாடி கட்டிடம் 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை' (திராவிடர் கழகம்)யால் கட்டப்பட்டு 'ஜஸோலா' 'பெரியார் மய்யம்'  அன்றைய தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் 02.05.2010 இல் திறந்துவைக்கப்பட்டது. இதில் கல்வி நிலையமும் மருத்துவ மனையும் செயல்படுகிறது.

திரைப்படம்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பாக 'பெரியார்' என்கின்ற தந்தை பெரியாரின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் தயாரிக்கப்பட்டு 2007 மே-1இல் திரையிடப்பட்டது..தமிழ்நாடு அரசு(முதல்வர் கலைஞர்) சார்பில் இதற்கு சிறிதளவு நிதியும் வழங்கப்பட்டது. திரைப்படம் 100 நாளை கடந்தது. பிறகு தெலுங்கு மொழியிலும் வெளியிடப்பட்டது.




பெரியார் பெயரில் விருதுகள்

1.தமிழ்நாடு அரசு(முதல்வர் ஜெ.ஜெயல்லிதா) சார்பில் 'பெரியார் சமூகநீதி விருது'  ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2.திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

3.திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 'பெரியார் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

4.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'பெரியார் ஒளி' விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பெரியார் உலகம்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில்  'பெரியார் உலகம்' என்கின்ற பெயரில் அறிவு வளர்ச்சி பூங்கா அமையவுள்ளது. அதில் 40 அடி உயர தாங்கு மேடையில் தந்தை பெரியாரின் 94 அடி உயர சிலை அமைக்கப்படவுள்ளது.

சிலையின் முன் மாதிரி
முதல் சிலை
#
செருப்பு வீசப்பட்ட இடத்தில் சிலை
கடலூரில் தந்தை பெரியாரின் மீது முன்பு ஒரு முறை செருப்பு வீசப்பட்டது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் தந்தை பெரியார் உயிருடன் இருக்கும் போதே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 13இல் கடலூரில் சிலை வைக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலத்தில் முதன்முதலாக
திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை
ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் 2006–ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாலையில் தந்தை பெரியாரின் முதல் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்திட ஆந்திர மாநில அரசின் அமைச்சர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். ஆந்திர நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) முன்னெடுப்பில் நிறுவப்பட்டது இந்தச் சிலை..
தெலங்கானா மாநிலத்தில் முதன்முதலாக
திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை
டிசம்பர் 14 & 15 ஆகிய இருநாள்களும் தெலங்கானா – ஆந்திரா மாநிலங்களில் பரந்துபட்டு செயல்படும் மானவ விகாச வேதிகா எனும் மனித மேம்பாட்டு மன்றத்தின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. முதல் நாளான டிசம்பர் 14 அன்று மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் (தெலங்கானா) தந்தை பெரியாரின் சிலையினைக் காணொலி வாயிலாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை ஆற்றினார்..


அறிவியல் அருங்காட்சியகம் (மியூசியம்)
தமிழ்நாடு அரசு 17.09.1990இல் சென்னை கோட்டூரில் 'பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம்' என்கின்ற பெயரில் அறிவியல் அருங்காட்சியகம் (மியூசியம்) அமைத்துள்ளது.

சென்னை கொளத்தூர்பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.. சில சிறப்பு சிகிச்சை களை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட 20024ஆம் ஆண்டு மார்ச் மாதம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ஆறு தங்களுடன் கட்டப் பட்டுள்ள இப்புதிய மருத்துவமனையை பெரியார் மருத்துவமனை என்று பெயரிட்டு  27.02.2025 மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். 

மறைக்கப்பட்ட புத்தகம்

1979 ஆம் ஆண்டு ம.கோ.இரா தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் குழு அமைத்து நெ.து. சுந்தரவடிவேலு அவர்களை தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றைச் சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது. 1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை.

கடைசியாக திருத்தப்பட்டது : 16.02.2026


உள்ளடக்கம்

 
  • தொடக்கம்
  • வாழ்க்கை
    • குடும்பம்
      • அரசியல் வாழ்வு
        • இதழ்கள், ஏடுகள் மற்றும் நாளிதழ்கள்
          • மறைவு
            • விமர்சனங்கள்
              • நினைவகங்கள்
                • மறைக்கப்பட்ட புத்தகம்
                  • இவற்றையும் பார்க்க
                    • குறிப்புகள்
                      • சான்றுகள்
                        • [1]. 

                          [2]. 

                          நெ.து.சுந்தரவடிவேலு

                           அவர்களின்

                           'புரட்சியாளர் பெரியார்

                          '

                        • மேற்கோள்கள்
                          • மேலும் படிக்க
                            • வெளி இணைப்புகள்

                            சுந்தர்ராவ் நாயுடு

                            ஆதி திராவிடர்களின் உரிமைக் காவலர் சுந்தர்ராவ்  - எக்ஸ்ரே. ந.அ. கருணாகரன் (கட்டுரையாளர்) 1916 நவம்பர் 20ல் தென் இந்தி...